கேரளாவில் தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது
பயிற்சியாளர், சக விளையாட்டு வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
கோழிக்கோடு,
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை ஒருவர், தான் சிறுமியாக இருக்கும்போது பல்வேறு நபர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குழந்தைகள் நலக் கமிட்டியில் புகாரளித்துள்ளார். தனது 13 வயது முதல் 5 ஆண்டுகளாக இந்த கொடுமைக்கு ஆளாகி வந்ததாக தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இந்த வழக்கில் 60க்கும் மேற்பட்டோர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பத்தனம்திட்டாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது பயிற்சியாளர், சக விளையாட்டு வீரர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கில் சுபின், சந்தீப், வினீத், அனந்து, ஸ்ரீனி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கு தேவையான ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு குழந்தைகள் நலக் கமிட்டியும் காவல்துறையும் உறுதியளித்தனர். தடகள வீராங்கனை பல்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.