அனைத்து தகவல்களையும் ஓரிடத்தில் தொகுக்க வசதியாக தேசிய புலனாய்வு கட்டம்(நேட்கிரிட்) வளாகம் திறப்பு!

பெங்களூருவில் தேசிய புலனாய்வு கட்டம்(நேட்கிரிட்) வளாகத்தை திறந்து வைத்தார் மந்திரி அமித் ஷா.

Update: 2022-05-03 16:51 GMT
Image Source: Twitter @PIB_India
பெங்களூரு,

பெங்களூருவில் தேசிய புலனாய்வு கட்டம்(நேட்கிரிட்) வளாகத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை மந்திரி அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்-மந்திரி  பசவராஜ பொம்மை, கர்நாடக உள்துறை மந்திரி அரகா ஞானேந்திரா, மத்திய உள்துறை இணை மந்திரி  நிசித் பிரமானிக் மற்றும் மத்திய உள்துறை செயலர் ஆகியோர் உடனிருந்தனர்.

குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளின் அத்தனை தகவல்களையும் ஓரிடத்தில் தொகுத்து, அவற்றை அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பயன்படுத்தும் விதத்தை மாற்றவேண்டும் என்பதற்காக உருவான யோசனைதான் நேட்கிரிட்.

நேட்கிரிட் சேவைகள் மற்றும் அதிலுள்ள தகவல்கள், 11 மத்திய அமைப்புகளுக்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறைக்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

இந்த விழாவில் அமித் ஷா பேசியதாவது:- “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு பதவியேற்ற முதல் நாளிலிருந்தே பயங்கரவாதத்திற்கு எதிரான சமரச கொள்கையை கொண்டிருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவையே மோடி அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்.

நவீன கால குற்றங்களை நிறுத்த, நாம் இரண்டு படிகள் முன்னேறி சிந்திக்க வேண்டும். அதில் நேட்கிரிட்-க்கு சிறப்பான மற்றும் முக்கிய பங்கு இருக்கும்.

இன்று பாதுகாப்புத் தேவைகள் கணிசமாக மாறியுள்ளன. எனவே, நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களைத் தானாகவே, பாதுகாப்பான மற்றும் உடனடி அணுகலைப் பெறுவதற்கான சட்ட மற்றும் பாதுகாப்பு முகமைகளின் தேவை உள்ளது. 

தரவு சேகரிப்பு நிறுவனங்களிடமிருந்து தகவல்களை அணுகுவதற்கான அதிநவீன மற்றும் புதுமையான தகவல் தொழில்நுட்ப தளத்தை உருவாக்கி செயல்படுத்தும் பணியை நேட்கிரிட்டிடம் அரசு ஒப்படைத்துள்ளது. பல்வேறு தரவு ஆதாரங்களை இணைக்கும் பொறுப்பைநேட்கிரிட் நிறைவேற்றும். 

மேலும் புலனாய்வுத்துறையில் சிறப்பான அடித்தளமிட்டு, புலனாய்வு முகமைகளுக்கு தேவையான தரவுகளை தந்து பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவளிப்போருக்கும் எதிரான போரில்  இந்த அமைப்பு  துணையாக நிற்கும். 

தேசிய புலனாய்வு அமைப்பு தன்னை மேம்படுத்திக் கொள்ள உள்ளமைக்கப்பட்ட வழிமுறையை கொண்டிருக்க வேண்டும். நாட்டிற்குள் செய்யப்படும் பல்வேறு குற்றங்களின் செயல்பாட்டு முறைகளின் தரவுத் தளத்தை உருவாக்க இந்த அமைப்பில் ஒரு ஆய்வுக் குழு இருக்க வேண்டும்.

சரியான நோக்கங்களுக்காக மட்டுமே இந்த அமைப்பு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், எந்த நேரத்திலும், அங்கீகாரம் இல்லாமல், தனிமனித தரவுகள் குறித்து அணுக வேண்டாம். 

மேலும், ஹவாலா பரிவர்த்தனைகள், பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதி, கள்ளநோட்டு, போதைப்பொருள், வெடிகுண்டு மிரட்டல்கள், சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் பிற பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு விரைவில் தேசிய தரவுத் தளத்தை உருவாக்கும்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்