மே. வங்க வன்முறை: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி
பிர்பும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, இவரது கொலை காரணமாக சொந்த ஊரான போக்டுய் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது, அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்த வன்முறை சம்பவம் மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி சம்பவம் நடைபெற்ற இடத்தை நாளை பார்வையிட உள்ளார்.
இந்த நிலையில், பிர்பும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில், வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
குற்றவாளிகளை கைது செய்ய மேற்கு வங்க அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயார். மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இதுபோன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களையும் மன்னிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.