உக்ரைன் விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
உக்ரைன் விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் சற்றுநேரத்தில் உயர்மட்ட கூட்டம் தொடங்க உள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளின் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் சூழல் காணப்படுகிறது. அவர்களுக்காக சிறப்பு விமானங்களை அந்தந்த நாடுகள் இயக்கி, மீட்டு வருகின்றன. இந்த போரால், குடிமக்களில் 752 பேர் உயிரிழந்து உள்ளனர் என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனின் சுமி நகரில் உள்ள எங்களுடைய இந்திய மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதனால், அவர்களின் பாதுகாப்புக்காக உடனடியாக ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பல வழிகளில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இதேபோன்று, எங்களுடைய மாணவர்களையும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், முகாம்களின் உள்ளே இருக்கவும், தேவையற்ற ஆபத்து விசயங்களில் ஈடுபடாமல் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளோம். மாணவர்களுடன், அமைச்சகமும் மற்றும் நம்முடைய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று தெரிவித்து உள்ளார். உக்ரைனில் இருந்து இதுவரை 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
உக்ரைன் விவகாரம் பற்றி தொடர்ந்து பிரதமர் மோடி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உக்ரைன் விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக சற்றுநேரத்தில் உயர்மட்ட கூட்டம் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் மாணவர்கள், இந்தியர்கள் மீட்பு நடவடிக்கை, விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.