ரூ.35 சிகரெட் கடனுக்காக கொலை: கடை உரிமையாளர் கைது
பரவூர் அருகே கடையில் பாக்கி வைத்து ரூ.35 தரமறுத்த நபரை கடை உரிமையாளர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் அருகே உள்ள வாணியக்காடு பகுதியை சேர்ந்தவர் மனு(வயது 35). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியில் டாஸ்மாக் கடை அருகே செயல்படும் பெட்டி கடையில் ரூ.35-க்கு சிகரெட் கடனாக வாங்கினார். ஆனால் அதற்கான பணத்தை நீண்ட நாட்கள் ஆகியும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் அந்த கடைக்கு மனு மீண்டும் சென்றபோது ஏற்கனவே வாங்கிய சிகரெட்டுக்கு பணத்தை கொடுக்கும்படி கடைக்காரர் சஜ்ஜன்(42) கேட்டார். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையில் அங்கு வந்த சஜ்ஜனின் சகோதரரான சாஜூவும் மனுவுடன் தகராறு செய்தார். மேலும் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் 2 பேரும் சேர்ந்த மனுவை கடுமையாக அடித்து உதைத்தனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மனு மயங்கி விழுந்தார். உடனே அவர்கள் 2 பேரும் தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் மனுவை மீட்டு பரவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மனு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பரவூர் போலீசார், விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மனுவை அடித்து கொலை செய்த சாஜூ மற்றும் சஜ்ஜன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் பரவூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்