உ.பி. முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் 15 பேர் படிக்காதவர்கள்...!!
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் 15 பேர் படிக்காதவர்கள் என தெரிய வந்துள்ளது.
லக்னோ,
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வரும் 10-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 7-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு முதல் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல், வரும் 10-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் பற்றிய ஒரு பார்வையை அவர்களது வேட்புமனுக்களுடன் இணைந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வழங்கி உள்ளது. அது வருமாறு:-
* 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் போட்டியிடுகிற 615 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆராயப்பட்டன.
* 15 வேட்பாளர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், அதாவது படிக்காதவர்கள். 38 வேட்பாளர்கள் எழுத்தறிவு உள்ளவர்கள். 10 பேர் ஐந்தாம் வகுப்பு தேறியவர்கள், 62 பேர் எட்டாம் வகுப்பு தேறியவர்கள். 65 பேர் பத்தாம் வகுப்பு தேறியவர்கள். 102 பேர் பிளஸ்-2 பாஸ் செய்தவர்கள் ஆவார்கள்.
* பட்டதாரிகள் 100 பேர், 78 பேர் தொழில்கல்வி படித்தவர்கள், 108 பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், 18 பேர் முனைவர் (ஆராய்ச்சி டாக்டர்) பட்டம் பெற்றவர்கள், 7 பேர் டிப்ளமோதாரர்கள், 12 பேர் தங்கள் கல்வித்தகவல்களை வழங்கவில்லை.
* 239 வேட்பாளர்கள் தங்களது கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என தெரிவித்திருக்கிறார்கள். 304 பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதி பெற்றவர்கள் என கூறி உள்ளனர்.
* 214 பேர் தங்கள் வயது 25 முதல் 40 வரையில் எனவும், 328 பேர் 41 முதல் 60 வயது வரையில் எனவும் தெரிவித்துள்ளனர். 73 பேர் தங்கள் வயது 61 முதல் 80 வரையில் என கூறி உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.