பெண்கள் ஒன்றுபட்டால் அரசியலை மாற்றலாம் - பிரியங்கா காந்தி பேச்சு

பெண்கள் ஒன்றுபட்டால் அரசியலை மாற்றலாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

Update: 2021-12-20 21:24 GMT
ரேபரேலி,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான பிரசார நிகழ்ச்சி நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோருடன் உரையாடினார்.

அவர்களிடையே பிரியங்கா பேசியதாவது:-

முதல்முறையாக பெண்களுக்காக தனி தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது. உடனே மற்ற கட்சிகளும் பெண்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டன. பெண்களை பற்றி மற்ற கட்சிகள் சிந்திக்க நான் எடுத்த சிறிய முயற்சியே காரணம் என்பது பெருமையாக இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக அராஜகம் நடக்கிறது. நாம் ஒன்றுபட்டால் இந்த அரசியலை மாற்றலாம். பெண்கள் சம உரிமையை விரும்புகிறார்கள் என்பதை இந்த சமுதாயம் உணரும்படி செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்