டெல்லியில் ரஷிய வெளியுறவு மந்திரியுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 1 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இருவரும் இருதரப்பு உறவுகளில் பல்வேறு அம்சங்கள் மற்றும் வருடாந்திர இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.இந்திய பிரதமர் மற்றும் ரஷிய அதிபர் இடையே ஆண்டுதோறும் உச்சிமாநாடு நடந்து வருகிறது. இதுவரை இரு நாட்டுத் தலைவர்கள் இடையே 20 உச்சி மாநாடுகள் நடந்துள்ளன.
ஆனால் கடந்த ஆண்டு உச்சிமாநாடு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்த சூழலில் 2021-ம் ஆண்டுக்கான இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டை நடத்துவது குறித்து ஜெய்சங்கர் மற்றும் செர்ஜி லாவ்ரோவ் ஆகிய இருவரும் தீவிர ஆலோசனை நடத்தியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.