உத்தரகாண்ட் காட்டுத்தீ: தேசிய பேரிடர் மேலாண்மை படை விரைகிறது
உத்தரகாண்ட்டில் கடந்த சில நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க தேசிய பேரிடர் மேலாண்மை படை விரைகிறது.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ கடுமையாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், காட்டுத்தீயை அணைக்க அங்கு தேசிய பேரிடர் மேலாண்மை படை குழுக்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்ப உத்தரவிடப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரத்சிங் ராவத்துடனும் தொலைபேசியில் பேசிய அமித்ஷா, காட்டுத்தீயால் உருவாகியுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நான் உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரத்சிங் ராவத்துடன் பேசி, காட்டுத்தீ குறித்து விசாரித்தேன். காட்டுத்தீயால் உயிர் மற்றும் உடமை இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, தற்போது தயார்நிலையில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை படை குழுக்களையும், ஹெலிகாப்டர்களையும் உடனடியாக உத்தரகாண்டுக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 62 ஹெக்டேர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நபர்கள் மற்றும் 7 விலங்குகள் உயிரிழந்ந்துள்ளதாகவும் மாநில வனத்துறையின் 12,000 காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அம்மாநில வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.