பெண் தற்கொலை; வரதட்சணையை நிறுத்துவோம் என முஸ்லிம் சமூகத்தினர் உறுதிமொழி

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்த சூழலில் ஆக்ரா முஸ்லிம் சமூக பிரிவினர் வரதட்சணை வாங்குவதில்லை என உறுதிமொழி எடுத்து உள்ளனர்.

Update: 2021-03-08 00:02 GMT
ஆக்ரா,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்திய சூழலில் ஆயிஷா என்ற முஸ்லிம் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் முஸ்லிம் சமூக பிரிவினர் ஆயிஷாவுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.  இதன்பின் ஜமித் உல் குரேஷ் என்ற அமைப்பின் தலைவர் முகமது ஷெரீப் காலே கூறும்பொழுது, வரதட்சணை கொடுக்கவில்லை என்பதற்காக, கணவர் மற்றும் அவரது உறவினரால் ஆயிஷா கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார்.  இதுபோன்ற நபர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

அனைத்து சமூகத்தினரும் வரதட்சணைக்கு மறுப்பு தெரிவிக்கும் முடிவை மேற்கொள்ள வேண்டும் என கூறிய  அவர், இஸ்லாமில் வரதட்சணை தடை செய்யப்பட்டு உள்ளது.  வரதட்சணையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.

இதேபோன்று தங்களது சமூகத்தின் அனைத்து திருமணங்களிலும் வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது ஆகியவற்றை நிறுத்த உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.

மேலும் செய்திகள்