பசுவதை தடை சட்ட மசோதா கொடூரமானது - சித்தராமையா பேட்டி
கர்நாடக அரசின் பசுவதை தடை சட்ட மசோதா கொடூரமானது என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ள பசுவதை தடை மசோதா கொடூரமானது. அறிவியலுக்கு மாறானது மட்டுமல்ல, விவசாயிகளுக்கு எதிரானது. மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் வாக்குகளை பெற வேண்டும் என்பது தான் இந்த மசோதாவின் பின்னணியில் பா.ஜனதாவுக்கு உள்ள நோக்கம் ஆகும். கால்நடைகள் மீது பா.ஜனதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகு இந்த பசுவதை தடை சட்டத்தை கொண்டு வரலாம்.
பசு மாடுகள் மீது பா.ஜனதாவுக்கு அதிக அக்கறை இருந்தால் நாடு முழுவதும் ஒரே சட்டமாக பசுவதை தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதையும் தடை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த சட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தினால், வயதான மாடுகளை அரசே ஏற்று பராமரிக்க வேண்டும். அல்லது அவற்றின் பராமரிப்புக்கு ஆகும் செலவை அரசே வழங்க வேண்டும்.
இதற்கு அரசு தயாராக இருந்தால், அடுத்த வாரமே சட்டசபையை கூட்டட்டும், அதில் பங்கேற்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் 1964-ம் ஆண்டு முதலே அமலில் உள்ளது. பால் வழங்காத, விவசாயத்திற்கு பயன்படாத, நோய்வாய்பட்ட பசுக்களை கொல்ல இந்த சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள பசுக்களை கொல்ல அந்த சட்டம் தடை விதித்துள்ளது. கர்நாடக அரசு தனது நிர்வாக தோல்விகளை மூடி மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இந்த சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது.
இந்த புதிய பசுவதை தடை சட்டம், பசு மாடுகளை கொண்டு செல்கிறவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறவர்களை பாதுகாக்கவே கொண்டு வரப்படுகிறது. நாட்டில் ஆண்டுக்கு 6 கோடி பசுக்கள் பால் வழங்குவதை நிறுத்துகிறது. அவற்றை பராமரிக்க தினமும் தலா 100 ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதாவது பால் வழங்காத ஒரு பசு மாட்டை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.36,500 வேண்டும். இந்த மாடுகளை பராமரிக்க 5 லட்சம் ஏக்கர் நிலம், கோசாலைகள் தேவைப்படுகிறது.
கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பசு மாடுகள், எருதுகள், எருமை மாடுகள் என மொத்தம் 84 லட்சத்து 69 ஆயிரத்து 4 கால்நடைகள் உள்ளன. இவற்றை வளர்க்க ஆண்டுக்கு 2.76 கோடி டன் தீவனம் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு தீவனம் கிடைப்பது 1.49 கோடி டன் மட்டுமே. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகள் கர்நாடகம் வறட்சியை எதிர்கொண்டுள்ளது.
பயிர்கள் சாகுபடி சரியான முறையில் நடைபெறாவிட்டால் தீவன பற்றாக்குறை ஏற்பட்டு மாடுகளை விவசாயிகள் விற்பனை செய்வார்கள். ஆனால் புதிய சட்டம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. கர்நாடகத்தில் தற்போது 159 கோசாலைகள் உள்ளன. அங்குள்ள மாடுகளுக்கு மாநில அரசு சரியான முறையில் தீவனம் வழங்குவது இல்லை. விவசாயிகள் தங்களின் வயதான மாடுகளை கோசாலைகளில் விட்டால், அதன் நிலைமை என்ன ஆகும் என்று மாநில அரசு நினைத்து பார்க்கிறதா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.