ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம் - யோகி ஆதித்யநாத் உத்தரவு

உ.பி: ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-10-03 15:29 GMT

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்தரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீசார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர். இளம்பெண் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் இதன் பாதிப்பும் தாக்கமும் மக்களை விட்டு இன்னும் விலகவில்லை. இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதனிடையே பலத்த எதிர்ப்புகளை மீறி ஹாத்தரஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்