கொரோனா சிகிச்சை முறையை மாற்றக் கோரிய வழக்கு முடித்து வைப்பு - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை
கொரோனா சிகிச்சை முறையை மாற்றுவது பற்றி டாக்டர்கள் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று கூறி அது தொடர்பான வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
கொரோனா தொற்றுக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் நுண்ணியிர்க்கொல்லி மருந்தான அசித்ரோமைசின் ஆகிய 2-யும் தருவதை நிறுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக கொரோனா சிகிச்சை குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ‘சிறந்த சிகிச்சைக்கான மக்கள் அமைப்பு’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோரால் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர் நிறுவனம் சார்பாக அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருந்து காணொலி வழியாக டாக்டர் குனால் சாஹா என்பவர் ஆஜரானார்.
அப்போது அவர் இந்த சிகிச்சைக்கு எதிராக தான் சவால் எதுவும் விடவில்லை என்றும், அதே நேரத்தில் இந்த மருந்துகள் தருவதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு நோயாளிகள் இறந்து விடுவதாகவும் அமெரிக்காவின் சில ஆய்வு நிறுவனங்கள் இது தொடர்பாக எச்சரித்து உள்ளதாகவும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “நாங்கள் இந்த விஷயத்தில் நிபுணர்கள் இல்லை. கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி டாக்டர்கள் மட்டுமே முடிவு எடுக்க முடியும். எனவே இது குறித்து நாங்கள் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் இதனை ஒரு கோரிக்கையாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தாக்கல் செய்யலாம். எனவே இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்” என கூறினர்.