கொரோனா எதிரொலி: டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி- கல்லூரிகள் - திரையரங்குகள் மூடல்
கொரோனா எதிரொலியால் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியர்கள் - 58, வெளிநாட்டினர் - 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்-வுடனான சந்திப்புக்கு பின் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும். தேர்வுகள் நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.