இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3-வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3-வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில், 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. வைரஸ் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவைச்சேர்ந்த 3-வயதுக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், இத்தாலியிலிருந்து 3-வயதுக் குழந்தையுடன் வந்த தம்பதியினர் கேரள விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பின்னர், குழந்தை உள்பட மூவரும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைக்கப்பட்டுக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அந்தக்குழந்தைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இந்தியாவில் 39 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.