கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா விலகல்
கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக இருந்தன.
அந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
கர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் உள்ளது. இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும் என்ற சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில், பா.ஜ.க. 10 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. 2 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையிலும் உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பதவி வகித்த முன்னாள் முதல் மந்திரியான சித்தராமையா கூறும்பொழுது, சட்டமன்ற குழு தலைவராக, ஜனநாயகத்திற்கு மரியாதை அளிக்க வேண்டிய தேவை எனக்கு உள்ளது என கூறினார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா விலகினார். அவரது பதவி விலகல் கடிதம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.