26, 27-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

26, 27-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2019-09-23 17:15 GMT
புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிராகவும், மேலும் சில கோரிக்கைளை வலியுறுத்தியும் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அதிகாரிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது.

இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதால் எழும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் ஒப்புக்கொண்டு உள்ளார். நிதித்துறை செயலாளரின் இந்த நேர்மறையான மற்றும் சாத்தியமான தீர்வை தொடர்ந்து, 26 மற்றும் 27-ந் தேதிகளில் மேற்கொள்ள இருந்த 48 மணி நேர வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் 26 மற்றும் 27-ந் தேதிகளில் வங்கி பணிகள் பாதிப்பின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்