பாதிக்கப்பட்ட உன்னோவ் சிறுமியின் சகோதரியும் பாலியல் கொடுமைக்கு ஆளானார்- தாயார் குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட உன்னோவ் சிறுமியின் சகோதரியும் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி உள்ளதாக தாயார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2019-08-02 08:04 GMT
லக்னோ,

கடந்த  2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதியன்று, உத்தரபிரதேசம்  உன்னாவ் மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின்  வீட்டுக்கு 17 வயது சிறுமி ஒருவர் வேலை கேட்டு சென்று உள்ளார்.  அப்போது அந்த சிறுமியை எம்.எல்.ஏ. கற்பழித்தார். சிறுமி மற்றும் அவரது தாயார் புகாரின் பேரில்  எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார்  மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. கைது செய்தது. தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட  சிறுமி, தனது உறவுப்பெண்கள் மற்றும் வக்கீலுடன் சமீபத்தில் ரேபரேலி மாவட்டத்தில் காரில் பயணம் செய்தபோது, அந்த கார் மீது ஒரு லாரி மோதியது. நம்பர் பிளேட்டில் எண்கள் மறைக்கப்பட்டிருந்த அந்த லாரி மோதியதில், அந்த சிறுமியின் உறவுப்பெண்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அந்தச்சிறுமியும்,வக்கீலும்  படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

உன்னோவ்  சிறுமி சிகிச்சை பெற்று வரும் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்தபோது, தாய் தனது குடும்பத்திற்கு நடந்த  கொடுமைகளை விவரித்து உள்ளார். அப்போது போலீசார்  பல முறை குறுக்கிட்டனர், ஆனால் அவரது குடும்பம் எவ்வாறு அழிந்து போனது என்று தாய் தொடர்ந்து விவரித்தார். அவர்களின் அவல நிலையை உலகம் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரின் உதவியாளர்கள்  பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்கள்  ஆணையத்தில் கூறி உள்ளதாக கூறினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வின் உதவியாளர்கள் எங்களை பலமுறை அச்சுறுத்தினர், துன்புறுத்தினர் என அவர் முன்பு கூறியிருந்தார். இப்போது, அவர்கள் தனது மற்றொரு மகளை கூட துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
மேலும் அவர் கூறும் போது, செங்கரின் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கு புகார்  கடிதங்களை அனுப்பி உள்ளோம்.

அவர்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா ஆண்களையும் அழிக்க நினைக்கிறார்கள் . அவர்கள் என் கணவரை கொடூரமாக கொன்றனர். அவர்கள் அவளது சாச்சாவை (பாதிக்கப்பட்டவரின் மாமா) ஒரு புனையப்பட்ட வழக்கில் சிக்கி சிறையில் அடைத்து உள்ளனர். எம்.எல்.ஏ பற்றி நல்ல விஷயங்களைக் கேட்டு வளர்ந்தோம். அவர் எங்கள் வீட்டிற்கு பலமுறை வந்துள்ளார். அவருக்காக ஆம்லெட் தயாரிக்கும்படி என் அம்மாவிடம் கேட்டுக்கொண்டார். இத்தனைக்கும் பிறகு, அவர் என் குடும்பத்தை துன்புறுத்தி உள்ளார் என கூறினார்.

மேலும் செய்திகள்