முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டுவதற்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டுவதற்கு எதிரான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Update: 2018-07-20 21:30 GMT
புதுடெல்லி, 

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடையில்லை என கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வாகன நிறுத்தம் போன்ற நிரந்தரமான கட்டுமான பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜராகி கேரள அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் மீது எதிர் பதில்மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்