நாட்டில் ஒரே நாளில் 1,573 பேருக்கு தொற்று: கொரோனா பரவல் சற்றே குறைந்தது
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர்.
புதுடெல்லி,
நாட்டில் நேற்றும் கொரோனா தொற்று பாதிப்பு சற்றே குறைந்தது. நேற்று முன்தினம் 1,805 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று 1,573 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 525 ஆனது.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர். இதுவரை இந்தத் தொற்றின் பிடியில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 703 ஆக உயர்ந்தது.
தொற்றினால் நேற்று நாட்டில் எங்கும் உயிர்ப்பலி இல்லை. இருப்பினும் கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 4-ஐக் கணக்கில் சேர்த்தனர். இதனால் தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 841 ஆக அதிகரித்தது.
தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 681 உயர்ந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 981 ஆகும்.