நாகர்கோவில்-மும்பை, நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழித்தடம் மாற்றம் - நாமக்கல், ராசிபுரம் வழியாக இயக்கப்படுகிறது

நாகர்கோவில்-மும்பை, நெல்லை-தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாமக்கல், ராசிபுரம் வழியாக வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது.

Update: 2019-11-30 22:15 GMT
நெல்லை, 

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு நெல்லை, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் வழியாக வாரத்தில் 4 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் நெல்லையில் இருந்து மும்பை அருகே உள்ள தாதர் நகருக்கு வாரத்தில் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில்கள் கரூரை கடந்து ஈரோடு வழியாக சேலத்துக்கு செல்கிறது. ஈரோட்டில் ரெயில் நிலையத்துக்குள் செல்லும் ரெயில் மீண்டும் சேலம் நோக்கி செல்லும்போது திசை மாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் அந்த ரெயிலில் என்ஜினை கழற்றி மாற்ற வேண்டி உள்ளது. இதனால் சுமார் 1½ மணி நேரம் கூடுதலாக செலவாகிறது.

இந்த நிலையில் கரூரில் இருந்து சேலத்துக்கு நாமக்கல், ராசிபுரம் வழியாக புதிய ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்டது. எனவே மும்பை மற்றும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்களை ஈரோடு வழியாக செல்வதை ரத்து செய்து விட்டு நாமக்கல், ராசிபுரம் வழியாக இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஈரோடு வழியாக மேலும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மும்பை வழித்தடத்தில் செல்வதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த ரெயில்களின் வழித்தடத்தை மாற்றி ரெயில்வே துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய வழித்தடத்தில் மும்பை மற்றும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முதலாவதாக இன்று மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் புதிய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலும், 7-ந்தேதி முதல் தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலும், 9-ந்தேதி முதல் நெல்லை -தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் புதிய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் அப்பாதுரை ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் பயண நேர விரயத்தை குறைக்கவும் எங்களது சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில் மும்பை மற்றும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வழித்தடம் ஈரோட்டுக்கு பதிலாக சேலம்-நாமக்கல்-கரூர் வழியாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகளுக்கு புதிய ரெயில்கள் கிடைத்து உள்ளன. தென் மாவட்டங்களை சேர்ந்த ரெயில் பயணிகள் விரைவாக மும்பை செல்வதற்கும், மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு விரைவாக திரும்புவதற்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த எம்.பி.க்களுக்கும், ரெயில்வே அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்