தென்காசி அருகே மாயமான மாணவிகள் மதுரையில் மீட்பு மெரினா கடற்கரையை சுற்றிப்பார்க்க சென்றதாக தகவல்

தென்காசி அருகே மாயமான மாணவிகள் மதுரையில் மீட்கப்பட்டனர். மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

Update: 2019-11-13 21:45 GMT
தென்காசி, 

தென்காசி அருகே மாயமான மாணவிகள் மதுரையில் மீட்கப்பட்டனர். மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாணவிகள் மாயம்

தென்காசி அருகே உள்ள மேலகரத்தில் ஒரு தனியார் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு படித்து வந்த மரிய லிபியா வயது (16), அபிநயா (15), மணிமேகலை (15), ஜெர்‌ஷா எஸ்தர் (14) ஆகிய 4 பேரையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் இருந்து காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காப்பக நிர்வாகி ஜெமிமா, இதுபற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதுகுறித்த தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் போலீசார் பரவச் செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரையில் ஒரு பழக்கடைக்காரர் இந்த மாணவிகளை பார்த்ததாக காப்பகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் காப்பக நிர்வாகி இதுபற்றி குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், மதுரை போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

மதுரையில் மீட்பு

பின்னர் மதுரை போலீசார், மதுரை யானைக்கல் பகுதியில் அந்த மாணவிகளை சாலையில் நடந்து செல்லும்போது கண்டுபிடித்து மீட்டனர். மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது, சென்னை மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் போலீசார் அவர்களை குற்றாலத்திற்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்