கை, கால்களை கட்டி வைத்து சாஹலை துன்புறுத்திய விவகாரம் - பிரபல மும்பை வீரரிடம் விரைவில் விசாரணை

மும்பை அணிக்காக விளையாடிய போது நடந்த சம்பவம் குறித்து சாஹல் பரபரப்பு தகவலை தெரிவித்து இருந்தார்.

Update: 2022-04-11 12:38 GMT
Image Courtesy : Rajasthan Royals Twitter
மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. கடந்த வருடம் வரை பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த வருடம்  ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 3 போட்டியில் சாஹல் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர் 2011 ஆம் ஆண்டு தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது  நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பரபரப்பு தகவலை சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

சாஹலின் இந்த பரப்பரப்பு தகவலால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சஹாலிடம் இது குறித்து பிசிசிஐ முழுமையாக விசாரணை நடத்தி அந்தக் குறிப்பிட்ட வீரருக்கு தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இது குறித்து சாஹல் கூறுகையில் மீண்டும் " மும்பை அணி 2011 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மும்பை அணியின் வீரர்களாக இருந்த அண்ட்ரெவ் சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிராங்கிளின் என் கை கால்களை கட்டி வைத்து வாயில் டேப் போட்டு ஒட்டி விட்டு சென்று விட்டனர். 

அதன் பிறகு மறுநாள் காலையில் மற்ற வீரர்கள் உதவியுடன் நான் அந்த அறையில் இருந்து வெளியே வந்தேன் . இது குறித்து தற்போது வரை என்னிடம் அவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை " என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது  இந்த விவகாரம் குறித்து முன்னாள் மும்பை வீரர் ஜேம்ஸ் பிராங்கிளின் -யிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்படும் என துர்ஹாம் கவுண்டி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
 
துர்ஹாம் கவுண்டி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜேம்ஸ் பிராங்கிளின் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்