கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் மோதுகிறது.;
ஆமதாபாத்,
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் போராடி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்தது. தற்போது தொடரை இந்தியா வசப்படுத்தி விட்டதால் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. யுஸ்வேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், இளம் வீரர் ரவி பிஷ்னோய் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
2-வது ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்டார். இந்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ‘புதுமையான முயற்சியாக ரிஷாப் பண்டை தொடக்க வரிசையில் இறக்கினோம். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் இது தற்காலிக முயற்சியே தவிர நிரந்தரமல்ல. கடைசி ஆட்டத்திற்கு தொடக்க வீரா் ஷிகர் தவான் வந்து விடுவார். அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்பும், உரிய நேரமும் வழங்குவது முக்கியம். நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அணியை உருவாக்குவதற்காக பல வித்தியாசமான முயற்சிகளை எடுப்பது அவசியம். இதனால் ஒரு சில ஆட்டங்களில் தோற்றாலும் கவலையில்லை’ என்றார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் தவான், இந்த ஆட்டத்தில் விளையாடுவது உறுதியாகி இருப்பதால் மிடில் வரிசையில் தீபக் ஹூடா நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். பேட்டிங்கை பொறுத்தவரை முதல் இரு ஆட்டங்களிலும் விராட் கோலி ஏமாற்றினார். இந்த ஆட்டத்திலாவது அவர் ரன்மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் முதல் ஆட்டத்தில் சுழல் சூறாவளிகள் அமர்க்களப்படுத்தினர். கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதால் இன்றைய ஆட்டத்திலும் பவுலர்களின் தாக்கம் மேலோங்க வாய்ப்புள்ளது. தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை ஒரு நாள் கிரிக்கெட்டில் சமீப காலமாக சொதப்புகிறது. கடந்த 17 ஆட்டங்களில் 11-ல் அந்த அணி 50 ஓவர்களை முழுமையாக பேட் செய்யவில்லை. அதற்குள் சுருண்டு விடுகிறது. 2-வது ஆட்டத்தில் இந்தியாவை 237 ரன்களில் கட்டுப்படுத்தி அதை கூட நெருங்க முடியாமல் 193 ரன்னில் அடங்கியது.
ஆறுதல் வெற்றி முனைப்புடன் களம் காணும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கேப்டன் பொல்லார்ட் காயத்தால் முந்ைதய ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டார். இன்றைய ஆட்டத்தில் பொல்லார்ட் திரும்புவாரா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.