இருதய நோய்கள் வராமல் தடுக்கும் வாழ்வியல் வழிமுறைகள்.. விளக்குகிறார் டாக்டர் வி.மகாதேவன்


இருதய நோய்கள் வராமல் தடுக்கும் வாழ்வியல் வழிமுறைகள்..  விளக்குகிறார் டாக்டர் வி.மகாதேவன்
x
தினத்தந்தி 12 Oct 2023 4:00 PM IST (Updated: 12 Oct 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

இருதய நோய்கள் வருவதற்கான காரணமும் நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையோடு இருந்தால் இதை தடுக்க முடியும் என்று பிரபல காவேரி மருத்துவமனை இருதய நோய் மருத்துவர் மகாதேவன் அவர்கள் கூறியவை

இன்றைய சூழலில் இந்தியாவில் இருதய தொடர்பான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக் தற்போது 30, 40 வயதினரை கூட தாக்குகிறது.

இத்தகைய இருதய நோய்கள் வருவதற்கான காரணமும் நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையோடு இருந்தால் இதை தடுக்க முடியும் என்று பிரபல காவேரி மருத்துவமனை இருதய நோய் மருத்துவர் மகாதேவன் அவர்கள் கூறியவை பின்வருமாறு:-

இருதயம் தொடர்பான நோய்கள் மரபியல் சார்ந்தும் வருகின்றன என்றாலும், அவை மிகக் குறைந்த சதவீதம் தான். நம்முடைய வாழ்வியல் மாற்றங்களில் ஏற்பட்ட தடுமாற்றங்களும் நம் உடல் பற்றிய அக்கறையின்மையும் தான் இத்தகைய நோய்களுக்கு காரணம் எனலாம்.

குறிப்பாக உடல் அதிக அளவு பருமனாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் அதாவது பிளட் பிரஷர் உள்ளவர்கள், கொலஸ்ட்ராலின் அளவு கூடுதலாக இருப்பவர்கள், கட்டுக்குள் வைக்காத சர்க்கரை நோயாளிகள்.. மேற்படி நான்கு வகையான பிரச்சனைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ உடையவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நம் உடல் தேவைக்கு அதிகமாக உணவு உண்ணும் போது, போதுமான உடற்பயிற்சியும் இல்லை என்றால் உடலில் உள்ள கொழுப்பின் சதவிகிதம் அதிகரிக்கும். இது நம் உடலில் எல்லா இடங்களிலும் இந்த கொழுப்பு தங்க வழிவகுக்கும் இவை ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தை சீராக இயங்காமல் தடுக்கும்.

தினப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் காலையிலிருந்து இரவு வரை எதையோ நோக்கி மிகுந்த அழுத்தத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டம் நம் மனநிலையில் இருந்து உடலுக்கு மாறும் போது உடலுக்கு அதிகப்படியான ரத்த அழுத்தத்தை தருகிறது. இது இருதயம் மட்டுமல்ல உடலின் எல்லா உறுப்புகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது

இருதயம் இதில் பெரிய அளவிற்கு பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை நோய் தற்போது இளம் வயதினரை அதிகளவுக்கு பாதிக்கிறது. ஒரு கணக்கெடுப்பில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகும் போது முறையான மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இளம் வயதினர் உணவின் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்று, ஆனால் அவ்வாறு செயல்படாமல் மேலும் முறையான மருத்துவத்தை எடுக்காமல் சர்க்கரை நோயை அதிகப்படுத்திக கொள்கின்றனர். இதனால் ரத்தக்குழாய்களை சேதம் ஏற்படுத்திக் கொண்டு பின்னர் மருத்துவரை அணுகுகின்றனர் இவர்களும் இருதய நோயின் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

குடிப்பழக்கம் புகை பழக்கம் இரண்டுமே உடலுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடியது என்பது அந்த இரண்டு பொருட்களிலுமே அச்சடித்து இருப்பார்கள். மேற்படி இரண்டையும் எந்த அளவிற்கு குறைவாக எடுத்தாலும் அது எப்படியும் உடலுக்கு தீங்கை தான் கொடுக்கும். இதை இள வயதினர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

என்னுடைய பிரச்சினைகள் வேலைப்பளு போன்றவற்றினால் மன அழுத்தம் ஏற்படுகிறது இது போன்ற பழக்கங்கள் அவ்வப்போது இதிலிருந்து என்னை விடுவிக்கிறது என்ற சாக்கு போக்குகள் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இளம் வயதினர் நோய்களின் பாதிப்புக்கு உள்ளாவதற்கு மேற்படி இரண்டு பழக்கங்கள் மிக முக்கியம் என்றால் மிகை இல்லை.

உணவைப் பொறுத்தவரையில் காய்கறிகளை அதிகளவு சேர்த்துக் கொள்வதும், பழங்களை சார் பிழியாமல் அப்படியே உண்ணுகின்ற பழக்கமும், மற்றும் அதிகளவுக்கு தானியம் பருப்பு வகைகள் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் உடல் பருமன் வராது கொலஸ்ட்ரால் அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை.

நல்ல தூக்கமும் நல்ல உணவு பழக்கங்களும் ஆரோக்கியமான தகுந்த மேற்பார்வையுடன் உடற்பயிற்சியும் திட்டமிட்ட முறையான தினப்படி வாழ்க்கையும் நம்முடைய தினப்படி வாழ்வை செம்மைப்படுத்துவதோடு நம் வருங்காலத்தையும்வளப்படுத்தும்.

இருதய நோய் உள்ளிட்ட எல்லா நோய்களையுமே நம்மை அணுகாமல் மகிழ்வாய் வாழலாம் என்று கூறி முடித்தார் டாக்டர் மகாதேவன் அவர்கள்.

Dr. V. Mahadevan

Cardio Diabetologist & Senior Interventional Cardiologist

Kauvery Hospital Vadapalani Chennai

For Appointments Call : 044 4000 6000



Next Story