அறிவியல்பூர்வமாக தேர்தலை கையாளும் திமுக


அறிவியல்பூர்வமாக தேர்தலை கையாளும் திமுக
x
தினத்தந்தி 17 April 2024 10:35 AM IST (Updated: 17 April 2024 11:59 AM IST)
t-max-icont-min-icon

திமுக ஐடி விங் அதன் முழு செயல் திறனோடு செயல்படுவதில்லை எனும் புகார் கட்சி வட்டாரத்திலிருந்து கூட வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த தேர்தலில் அந்த குறைபாட்டையும் நேர் செய்திருக்கிறார்கள்...

இந்திய தேர்தல்கள் குறித்தும் அரசியல் போக்கு குறித்தும் தொடர்ச்சியாக எழுதி மற்றும் பேசி வரும் அறிவுஜீவிகள் பலரும் பாஜக குறித்து குறிப்பிடும் ஒரு விஷயம் அவர்கள் இந்திய தேர்தல்களை தொழில்நுட்பம் மூலமும் அறிவியல் பூர்வமாகவும் அணுகுகிறார்கள் என்பதே. சமூக ஊடகத்தின் அரசியல் பங்கை முதலில் கண்டறிந்தது அவர்கள்தான் என்பதை பாஜகவின் எதிரிகள் கூட ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகள் குறித்து வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு இந்த கோணத்தை இவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான்.

பாஜக அல்லாத கட்சிகள் குறித்தான இந்த விமர்சனத்தை முதலில் உடைத்து முன்னேறி இருக்கிறது திமுக. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் இந்தியாவின் இரு வேறு நிறுவனங்களிடம் தேர்தலை கையாளும் பொறுப்பை கொடுத்த திமுக இம்முறை தனக்கென ஒரு தனிப்பட்ட நிறுவனத்தை கட்டமைத்து இருக்கிறது. இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலம் தரவுகள் வேறு நிறுவனத்திடம் செல்ல வாய்ப்பு இல்லை. ஒரே நிறுவனம் இன்று ஒரு கட்சிக்கும் நாளை அதன் எதிர்க்கட்சிக்கும் வேலை செய்யும் போது இரண்டு தரப்பு தரவுகளும் கட்சியின் கட்டமைப்பு குறித்த செய்திகளும் அவர்களுக்கு முழுமையாக சென்று விடும். இதன்மூலம் அவர்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய நெருக்கடி கட்சிகளுக்கு உருவாகும். தனக்கென தனிப்பட்ட ஒரு தேர்தல் உத்தி வகுக்கும் மற்றும் மேலாண்மை செய்யும் நிறுவனத்தை நிறுவியதன் மூலம் திமுக அந்த நெருக்கடியை எதிர்கொள்ளாமல் தப்பியிருக்கிறது.

இது நாள் வரை சமூக ஊடகங்களில் மிக அதிக அளவு விளம்பரம் செய்யும் கட்சியாக பாஜக இருந்த நிலை மாறி இன்று youtubeயை பாவிக்கும் அத்தனை பேரும் திமுக விளம்பரத்தை காணும் படி செய்திருக்கிறது அந்தக் கட்சி.

களத்தில் பெரிய அளவிற்கு தேர்தல் பிரச்சாரம் நடக்கவில்லை எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால் அதனை ஈடு கட்டும் விதமாக பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இணையத்தில் தனது இருப்பை உறுதி செய்து திமுக தேர்தல் களத்தில் தமது பிரச்சாரத்தை நிலை நிறுத்தி இருக்கிறது.

அடுத்ததாக அவர்கள் தரவுகளை கையாளும் திறன் மேம்பட்டிருக்கிறது. அதிமுக மாநாட்டில் சாப்பாடு கொட்டப்பட்ட செய்தி பரவலான பிறகு திமுகவின் பல்வேறு கூட்டங்களின் உணவு ஏற்பாடு குறித்த நேர்மறையான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. சில தொகுதிகளில் திமுக தரப்பு வேலைகளில் சுணக்கம் காணப்படுவதாக செய்திகள் வந்த ஓரிரு நாட்களில் கட்சி அவற்றின் மீது கவனம் செலுத்திய செய்திகளும் வந்து சேர்ந்தன. நாமக்கல் வேட்பாளர் குறித்த எதிர்மறை செய்திகள் தீவிரமான உடனே கொ ம தே க வேட்பாளர் மாற்றப்பட்டார். இதற்கு முந்தைய தேர்தல்களில் கூட்டணி கட்சிக்கு திமுக ஒத்துழைக்கவில்லை எனும் செய்தி ஆங்காங்கே வெளிப்படும். ஆனால் இந்த முறை கூட்டணி கட்சிக்காக அதிக உழைப்போடு திமுக வேலை செய்கிறது எனும் செய்தியே பரவலாக வந்தது. மேலும் வளமான தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுத்து நெருக்கடியான தொகுதிகளை திமுக எடுத்துக் கொண்டது எனும் செய்தி மக்களை சென்றடைந்தது. இவ்வாறு களத்துக்கும் தலைமைக்குமான இடைவெளி பெருமளவு சீர் செய்யப்பட்டிருந்தது.

எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வருவதை கட்டுப்படுத்துவதில் திமுகவின் மேலாண்மை வலுவடைந்து இருக்கிறது. மேலும் பாஜக அதிமுக செய்யும் தவறுகள் ஊடக கவனம் பெறுவதும் மேம்பட்டு இருக்கிறது. தேசிய ஊடகங்களை ஒட்டுமொத்தமாக பாஜக கைப்பற்றி இருக்கும் சூழலில் மாநில அளவில் நடக்கும் செய்தி ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவது

என்பது ஒப்பீட்டளவில் கடினமான பணி. ஊடகத்திற்கான லைசென்ஸ் உள்ளிட்ட கடுமையான நெருக்கடிகளை ஒன்றிய அரசால் கொடுக்க முடியும் எனும் நிலை இருக்கும்போது ஒரு மாநில அரசு தனது அதிகார பலத்தால் மட்டும் இந்த நிறுவனங்களை கட்டுப்படுத்தி விட முடியாது. ஆகவே இந்த தளத்திலும் திமுக தனது செல்வாக்கை மாற்று வழிகளில் நிலை நிறுத்துகிறது என்று கருத வேண்டி இருக்கிறது. ஆகவேதான் எங்களுக்கு உரிய ஸ்பேஸ் கிடைப்பதில்லை என்று அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது தமிழ்நாடு பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் திமுக ஊடகங்களை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

திமுக ஐடி விங் அதன் முழு செயல் திறனோடு செயல்படுவதில்லை எனும் புகார் கட்சி வட்டாரத்திலிருந்து கூட வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த தேர்தலில் அந்த குறைபாட்டையும் நேர் செய்திருக்கிறார்கள்.. Youtube சேனல்களில் திமுகவுக்கு ஆதரவாக பேசுபவர்களது பங்கேற்பு தொடர்ச்சியாக இருக்கிறது. இவை எலலாம் இந்த சமூக ஊடக காலத்தில் தேர்தல் மேலாண்மைக்கு முக்கியமானவை.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில் இவை எதேச்சையாக நடக்க வாய்ப்பில்லை. ஒருங்கிணைந்த குழு நடவடிக்கை மூலமே தொய்வில்லாமல் இத்தகைய பணிகள் நடக்க முடியும். அந்த வகையில் திமுக இந்த தேர்தலை அறிவியல் பூர்வமாகவும் தரவுகளின் அடிப்படையிலும் அணுகுகிறது என்றே அனுமானிக்க வேண்டி இருக்கிறது. பாஜக தேர்தல்களை எப்படி எதிர்கொள்கிறது என்பது குறித்து சில பகுப்பாய்வு புத்தகங்கள் வெளியானது போல திமுக குறித்தும் ஏதேனும் நூல்கள் விரைவில் எழுதப்படலாம். அதில் இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிப்படக்கூடும்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story