விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்- திருமாவளவன்
விசிகவில் இருந்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவை கடுமையாக விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என திருமாவளவன் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. இது குறித்து நேற்று முன் தினம் கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.