இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும்


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும்
x

சமீபத்திய ஒரு ஆய்வில், பெரும்பாலான இளைய சமுதாயத்தினர், அவர்களின் பெற்றோர் பார்க்கும் வேலையை விரும்பவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய ஒரு ஆய்வில், பெரும்பாலான இளைய சமுதாயத்தினர், அவர்களின் பெற்றோர் பார்க்கும் வேலையை விரும்பவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எல்லோருமே பசுமையான ஒரு வருங்காலத்தைத்தான் நாடி நிற்கிறார்கள். அரசு, தொழில்துறையை வளர்க்கும் முயற்சியில், புதுப்புது தொழிற்சாலைகள் உருவாகின்றன. வேலைவாய்ப்புகள் வர இருக்கிறது. ஆனால், பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் படித்து முடிப்பவர்களின் ஆற்றல், அந்த தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை.

'அரைக்காசு உத்தியோகம் என்றாலும், அரசாங்க உத்தியோகம் வேண்டும்' என்ற மனோபாவம் நமது இளைஞர்களுக்கு இருக்கிறது. அரசு ஊழியரானால் கைநிறைய சம்பளம், காலநிலை பதவி உயர்வு, நிறைய விடுமுறை, சலுகைகள், பணியில் இருந்து ஓய்வுபெற்றால் பென்ஷன் என்று இப்படி பல நிலைகள் அவர்களுக்கு ஆசையை உண்டாக்குகிறது. அதனால்தான், பலர் தாங்கள் படித்த படிப்புக்கே சம்பந்தம் இல்லாத அரசு வேலைகளில் சேரத்துடிக்கிறார்கள். குரூப்-1 தேர்வில் மட்டுமல்லாமல், குரூப்-2, குரூப்-3, குரூப்-4 பணிகளில்கூட என்ஜினீயரிங், வேளாண்மை, சட்டம், கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படித்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். குரூப்-1 தேர்வில் மருத்துவம் படித்த டாக்டர்கள் கூட சேர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அதேநேரத்தில் போலீஸ்காரர், கிராம நிர்வாக அலுவலர், பியூன் வேலையில்கூட என்ஜினீயரிங் படித்தவர்கள், முதுகலை பட்டதாரிகள் சேர்ந்து இருக்கிறார்கள்.

அப்படி இன்றைய இளைஞர்களின் கனவு வேலையாக அரசு வேலை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இப்போது 67.61 லட்சம் பேர் வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலமாகத்தான் அரசு பணிகளுக்கு தேர்வு நடக்கிறது. சமீபத்தில் 92 பணிகளுக்காக நடந்த குரூப்-1 தேர்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேரும், குரூப்-4 தேர்வை எழுத 22 லட்சம் பேரும், குரூப்-2 தேர்வை எழுத 12 லட்சம் பேரும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டு போட்டி தேர்வுகளுக்கான அட்டவணையில், தொழில்நுட்பம் சார்ந்த 1,754 பணியிடங்களுக்குத்தான் 10 தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நவம்பரில் முதல்நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் இல்லை. குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3ஏ போன்ற தேர்வுகளையும் 2023-ம் ஆண்டு நடத்தப்படுவது குறித்த அறிவிப்பும் இல்லை. அதில் குரூப்-4-க்கான தேர்வும் 2024-ல் தான் என்று வெளியிடப்பட்டுள்ளதே தவிர, காலிப்பணியிடம் குறித்த விவரங்கள் இல்லை. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த தேர்வை எழுதவேண்டும் என்று, அதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள நேரம் வேண்டும் என்பதற்காக, பல இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் தாங்கள் பார்த்த வேலையை கூட விட்டு விட்ட நிலையும் இருக்கிறது.

எனவே, அரசு பணிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கூடுதலான பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்துவது பற்றி அரசு பரிசீலிக்கவேண்டும். அதேசமயம், அரசு வேலைக்குத்தான் போகவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, இளைய சமுதாயத்தினரும் தனியார் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பை பெறும் வகையில், தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். புத்தாக்க தொழில்கள் தொடங்க அரசு வழங்கும் சலுகைகள், மானியங்களைப் பயன்படுத்தி தொழில்முனைவோராக வேண்டும் என்ற முயற்சிகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.


Next Story