'நீட்' தேர்வுக்கு விரைவில் முடிவு வராதா?


நீட் தேர்வுக்கு விரைவில் முடிவு வராதா?
x

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு மற்றொரு உயிரை காவு வாங்கிவிட்டது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், எந்தவித சிக்கலும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வு மற்றொரு உயிரை காவு வாங்கிவிட்டது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், எந்தவித சிக்கலும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய தகுதி காண் நுழைவு தேர்வு, அதாவது 'நீட்' தேர்வு மூலம்தான் நடக்கவேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் மட்டும் அந்த ஆண்டு இல்லாமல், அடுத்த ஆண்டு முதல் 'நீட்' தேர்வு மூலமே மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

'நீட்' தேர்வு வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்று தொடக்கம் முதலே எதிர்ப்பு குரல் பலமாக கிளம்பியது. அ.தி.மு.க. அரசிலும் இதற்காக முயற்சிகள் நடந்தன. சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது பலனளிக்கவில்லை. இதற்கிடையில், 'நீட்' தேர்வில் தோல்வியுற்றதாலும், 'நீட்' தேர்வுக்கு பயந்தும் 2017-ம் ஆண்டில் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி, பல மாணவ-மாணவிகள் தொடர்ந்து தங்கள் இன்னுயிரை நீக்க தற்கொலை செய்துகொண்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்வதற்காக பல கோணங்களில் முயற்சி செய்து வருகிறது. 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்காக சட்டசபையில் ஏகமனதாக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட தாமதத்துக்கு பிறகு கவர்னர் அதை திருப்பி அனுப்பினார். ஒரு மசோதா கவர்னரால் திருப்பி அனுப்படும் நேரத்தில், அந்த மசோதா மீண்டும் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால், கவர்னர் கையெழுத்திட்டுத்தான் ஆகவேண்டும் என்ற மரபுப்படி, மீண்டும் சட்டசபையில் அந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் கையெழுத்திடாமல் கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துவிட்டார்.

ஜனாதிபதியிடம் அந்த மசோதா நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களிடம் கடந்த சனிக்கிழமை உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, "அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்தால் 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன்" என்று பேசியது பலத்த விமர்சனங்களை கிளப்பியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த போட்டோகிராபரான செல்வத்தின் மகன் ஜெகதீஸ்வரன் 'நீட்' தேர்வில் 2 முறை தோல்வியடைந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல், அவருடைய தந்தையும் உடனடியாக தற்கொலை செய்துகொண்டது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

ஜனாதிபதி உடனடியாக 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதே இப்போது தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த 'நீட்' தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. மாணவர்களுக்கும், எதையும் தாங்கும் மன வலிமைவேண்டும். அதற்குரிய மனநல பயிற்சிகளை பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அது வெற்றிக்கான வழி. மேலும், 'நீட்' தேர்வு வெற்றிதான் வாழ்க்கையல்ல, ஒரு வழி இல்லையென்றால், உலகில் முன்னேறுவதற்கு வேறு எத்தனையோ வழிகள் திறந்திருக்கின்றன என்பதை மாணவ பருவத்திலேயே கற்றுக்கொடுக்கவேண்டும். மொத்தத்தில் 'நீட்' தேர்வும் வேண்டாம், மாணவர்களின் தற்கொலையும் தொடரவேண்டாம்.


Related Tags :
Next Story