இவர்கள் புயலை கிளப்புவார்கள்!


These guys will cook up a storm!
x

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்கள்.

சென்னை,

நீண்ட நெடுங்காலமாக அரசியல் அரங்கில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராடி வந்த நிலையில், கடந்த 17-வது மக்களவையில் அதற்கான சட்ட மசோதா நிறைவேறியது. ஆனாலும் இன்னும் அமலுக்கு வரவில்லை. நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், 74 இடங்களில்தான் பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 13 சதவீத பெண் உறுப்பினர்கள்தான் மக்களவையை அலங்கரிக்கப்போகிறார்கள்.

நாட்டிலுள்ள மொத்த வாக்காளர்களில் ஓட்டு போட்டவர்கள் 64 கோடியே 20 லட்சமாகும். இதில் பெண்கள் 31 கோடியே 20 லட்சம் பேர் அடங்குவார்கள். 48 சதவீதம் அளவுக்கு பெண்கள் ஓட்டுபோட்டும் 13 சதவீதத்திலான பெண்கள்தான் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த மக்களவையில் 78 பேர் பெண்கள் இருந்த நிலையில், தற்போது 4 பேர் குறைந்திருப்பது வேதனையளிக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 74 பெண் உறுப்பினர்களில், பா.ஜனதாவை சேர்ந்த 32 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 பேரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 11 பேரும், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 4 பேரும் அடங்குவார்கள். காங்கிரஸ் கட்சியில் மொத்தம் போட்டியிட்ட பெண்கள் 41 பேரில் 13 பேரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட பெண்கள் 12 பேரில் 11 பேரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், தி.மு.க.வில் இருந்து கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ராணி ஸ்ரீகுமார் ஆகியோரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிமணி, வக்கீல் சுதா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்கள். இவர்களின் குரல் தமிழ்நாட்டு நலனுக்காக ஓங்கி ஒலிக்கும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. தமிழக பெண் எம்.பி.க்களைப்போல, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே, ராஷ்டிரிய ஜனதா தள உறுப்பினரும் லாலு பிரசாத்தின் மகளுமான மிசா பாரதி ஆகியோரின் குரலும் மக்களவையில் ஒலிக்கப்போகிறது. சினிமா உலகில் இருந்து நடிகைகள் ஹேமமாலினி, கங்கனா ரனாவத் மட்டுமல்லாமல், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்தும் சில நடிகைகள் உறுப்பினர்களாக ஆகியிருக்கிறார்கள்.

பெண் உறுப்பினர்கள் சமுதாயத்தின் பல மட்டங்களில் இருந்து வந்திருக்கிறார்கள். பெண் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், நாட்டிலேயே இளம் எம்.பி.க்களாக 25 வயதில் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மக்களவை தொகுதியில் இருந்து சஞ்சனா ஜாதவ்வும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த சம்பவி சவுத்திரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் டாக்டர்கள் இருக்கிறார்கள், வக்கீல்கள் இருக்கிறார்கள், நடிகைகள் இருக்கிறார்கள், முதலீடு வங்கியாளர் இருக்கிறார். பேராசிரியை இருக்கிறார். பழுத்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

ஆக, நாடாளுமன்றத்தில் 13 சதவீதமே பெண்கள் இருந்தாலும், இந்த பெண் உறுப்பினர்கள் அனைத்து துறைகளிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பதால் விவாதங்களில் புயலை கிளப்புவார்கள். ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்துவைப்பார்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. ஆனால், 33 சதவீதம் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ள நிலையில், அதை அமலுக்கு கொண்டுவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நாட்டில் 33 சதவீத காடுகள் இருந்தால், எப்படி பூமி செழிக்குமோ, அதுபோல் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் நாடு செழிக்கும். நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் பெண்கள் குரல், நாடு முழுவதும் உள்ள பெண்களின் நலனை போற்றி பாதுகாக்கும்.


Next Story