'நீட்' தேர்வில் தமிழகம் சாதனை!


நீட் தேர்வில் தமிழகம் சாதனை!
x

‘நீட்’ தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

'நீட்' தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2012-ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு என்ற 'நீட்' தேர்வை நடத்தி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தும் முறையை கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு தற்காலிகமாக தடை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து 2016-2017-ம் ஆண்டு முதல் அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையும் 'நீட்' தேர்வு மூலமே நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. என்றாலும் ஜெயலலிதா எடுத்த முயற்சியின் காரணமாக அந்த ஆண்டு 'நீட்' தேர்வு இல்லை. ஆனால் 2017-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 'நீட்' தேர்வு மூலமே மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. இருந்தாலும் 'நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசிலும் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதா திருப்பி அனுப்பிவிடப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டவுடன், மீண்டும் அதே மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்க, அவர் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து, அது நிலுவையில் உள்ளது. ஒரு பக்கம் அரசு 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று தீவிரமாக தொடர் முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், அதுவரையில் நாங்கள் 'நீட்' தேர்வில் எங்கள் திறமையை காட்டுவோம் என்ற உத்வேகத்தில் தமிழக மாணவர்கள் எடுத்த முயற்சி இப்போது முத்திரை பதித்துள்ளது.

இந்த ஆண்டு நடந்த 'நீட்' தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் எழுதினார்கள். கடந்த ஆண்டு 67 ஆயிரத்து 787 பேர் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 78 ஆயிரத்து 693 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அதாவது 54.4 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். இந்தியா முழுவதும் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் முதல் இடத்தில் சென்னையில் படித்த மாணவர் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்று இருக்கிறார். அவர் பெற்றோர் இருவருமே பள்ளிக்கூட ஆசிரியர்கள். முதல் முறையிலேயே தேர்வு பெற்ற பிரபஞ்சன் பெற்ற வெற்றிக்கு அவரது கடுமையான உழைப்பே காரணம். முதல் 10 மாணவர்களில் 4 பேர் தமிழக மாணவர்கள். தேசிய அளவில் முதல் 50 மாணவர்களில் 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.திருப்புகழ் முதல் இடத்தில் தேறி, தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். முதல் இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவிகள் யாரும் இல்லை என்பது ஒரு குறையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிறகு வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் அவர்களை எந்த போட்டி தேர்வையும் வெற்றிகரமாக எழுதும் வகையில் தயார்படுத்திவிடுகிறது என்றே கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.


Related Tags :
Next Story