நெஞ்சை பதற வைத்த தீ விபத்துகள்


நெஞ்சை பதற வைத்த தீ விபத்துகள்
x

தீயணைக்கும் படையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் கட்டுக்கடங்காத தீயை அணைக்க முடியவில்லை.

கடந்த வாரத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும், தலைநகர் டெல்லியிலும் நடந்த இருவேறு தீ விபத்துகள் நெஞ்சை பதற வைக்கிறது. குறிப்பாக டெல்லி தீ விபத்தில் சிக்கிய, பிறந்து சில நாட்கள், சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தைகள் எவ்வளவு துடிதுடித்து இறந்திருப்பார்கள் என்று எண்ணும்போது, இரும்பு மனம் கொண்டவர்களும் கண்ணீர் விடும் வகையில் இருக்கிறது.

ராஜ்கோட் நகரில் தனியாருக்கு சொந்தமான ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு அரங்கம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும், குறிப்பாக குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். கடந்த வாரம் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. அன்று மின்சார கசிவு காரணமாக திடீரென்று தீ பிடித்தது. தீயணைக்கும் படையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் கட்டுக்கடங்காத தீயை அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், திருமணம் நிச்சயமான ஒரு இளம் ஜோடியும், 9 சிறுவர்களும் அடங்குவார்கள். பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவு உருக்குலைந்து, கிட்டத்தட்ட சாம்பலாகிவிட்டது. டி.என்.ஏ. பரிசோதனை மூலமே கண்டுபிடிக்கும் முயற்சி நடக்கிறது.

இந்த விபத்து நடந்த பிறகே அரசுத் துறைகள் கண்விழித்து, இவர்கள் எங்களிடம் அனுமதி வாங்கவில்லை என்று புகார் கூறுகின்றன. இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல இருக்கிறது. இங்கு தீயணைக்கும் கருவியோ, அபாய எச்சரிக்கை மணியோ இல்லை என்று கூறப்படுகிறது. தீயை எளிதில் பரவச் செய்யும் தகடுகளால் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டவுடன் குஜராத் ஐகோர்ட்டு தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்த விபத்து நடந்த அடுத்த நாள் டெல்லியில் ஒரு குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடியபோது, அவர்களுடன் நல்ல மனம் படைத்த அக்கம் பக்கத்தினரும், பகத்சிங் சேவா தள் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் துணிச்சலுடன் கொழுந்துவிட்டு எரியும் தீக்குள் புகுந்து குழந்தைகளை மீட்டனர். இந்த மருத்துவமனையின் லைசென்சு காலாவதியாகி இருக்கிறது. 5 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில், 12 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பணியில் இருந்த டாக்டரும் ஆங்கில மருத்துவத்துக்கான தகுதி பெற்றவர் அல்ல. இந்த ஆஸ்பத்திரியில் அவசர வழியோ, தீயணைக்கும் கருவிகளோ இல்லை.

இந்த இரு விபத்துகளுக்கும் அரசாங்க அதிகாரிகள் தங்கள் கடமையை சரிவர செய்யாததே காரணம் என்று விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் ஆத்திரத்துடன் சொல்கிறார்கள். இப்போது விபத்து நடந்தவுடன், எங்களிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறுபவர்கள், ஏன் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?. முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற விபத்து நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, இனி இதுபோல விபத்துகள், அதாவது மனிதத் தவறுகளால் உருவாக்கப்பட்ட பேரிடர்கள் எங்கும் நடக்க வாய்ப்பு இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.


Next Story