'நீட்' தேர்வு மையத்தில் மாணவிகளுக்கு அவமானமா?


நீட் தேர்வு மையத்தில் மாணவிகளுக்கு அவமானமா?
x

பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட அனைத்து தொழிற்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவந்த நேரத்தில், திடீரென்று மருத்துவம் சார்ந்த தொழிற்கல்லூரிகளில் 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்ற ‘நீட்’ தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் முறை அமலுக்கு வந்தது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட அனைத்து தொழிற்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவந்த நேரத்தில், திடீரென்று மருத்துவம் சார்ந்த தொழிற்கல்லூரிகளில் 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்ற 'நீட்' தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் முறை அமலுக்கு வந்தது. அ.தி.மு.க. அரசும் சரி, தி.மு.க. அரசும் சரி 'நீட்' தேர்வு வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்று எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், சட்டசபையில் மசோதாக்களை நிறைவேற்றின. இப்போது தி.மு.க. அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மணிப்பூர் தவிர, நாடு முழுவதும் நடந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 'நீட்' தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் 95 ஆயிரத்து 824 மாணவிகளும், 51 ஆயிரத்து 757 மாணவர்களும் என ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் விண்ணப்பித்து இருந்தநிலையில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த தேர்வை எழுதவந்த மாணவிகள் அடைந்த அவமானங்கள் சொல்லி மாளாது. தலையை விரித்து போட்டுத்தான் தேர்வு எழுதபோகவேண்டும். தோடு, மூக்குத்தி, வளையல், செயின் ஆகியவற்றை கழற்று, கைகளில் கோவில்களில் கொடுத்த கயிறுகளை கட்டி இருக்கிறாயா, அதையும் கழற்று, இதையெல்லாம் கழற்றி வைத்துவிட்டுதான் போகவேண்டும், மெல்லிய ஆடைதான் அணியவேண்டும் என்பதோடு விட்டுவிடாமல், மெட்டல் டிடக்டரை கொண்டு உடலெல்லாம் சோதனை என்ற பெயரில் தடவி, ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ளாடையில் உள்ள ஹூக்கில் இருந்து சத்தம் வந்தது என்பதற்காக அதையும் கழற்றி வைத்துவிட்டு போக சொல்லியிருக்கிறார்கள்.

மனமகிழ்ச்சியோடு தேர்வுஎழுத வேண்டிய மாணவிகள் கூனிக்குறுகி மனஉளைச்சலோடும், அவமானத்தோடும் தேர்வு எழுதவேண்டிய அவலநிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பரிசோதனை என்ற பெயரில் பல அத்துமீறல்கள் நடந்துள்ளன. ஜீன்ஸ் போட்டிருந்த மாணவிகளை அதை அணியக்கூடாது என்று சொல்லியதால், சிலர் அதை கழற்றி, தங்களை அழைத்து வந்த குடும்பத்தினரிடம் கொடுத்து அவர்கள் அணிந்திருந்த லெக்கின்சை வாங்கி அணிந்து சென்றிருக்கிறார்கள். சிலர் பக்கத்து கடைகளுக்கு ஓடிச்சென்று புது லெக்கின்ஸ் வாங்கி அணிந்துச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த தேர்வு எழுத செல்லும்போதும், இதுபோல தேவையற்ற கட்டுப்பாடுகள் இல்லை. சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட எந்த தேர்விலும் பெண்களுக்கு இத்தகைய கொடுமை கிஞ்சித்தும் இல்லாத நிலையில், வளரிளம் பிஞ்சுவயதில் உள்ள இந்த மாணவிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? என்று தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் வேதனைக்குரல் எழும்புகிறது.

போதும் இனியும் இதுபோன்ற நிலைவேண்டாம். தமிழக அரசு இந்த பிரச்சினையை முன்னெடுத்து இனியும் இதுபோன்ற மனதை வருத்தும் சோதனைகள் வேண்டாம், தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற கண்காணிப்புகள், கூடுதல் தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமனம் போன்ற முறைகளை கையாண்டு 'நீட்' தேர்வை நடத்தவேண்டும், மொத்தத்தில் 'நீட்' தேர்வு வேண்டாம் என்ற முடிவை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பது அபலை மாணவிகளின் கோரிக்கையாக இருக்கிறது.


Related Tags :
Next Story