'நீட்' தேர்வு பயிற்சி மையம்


நீட் தேர்வு பயிற்சி மையம்
x

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக கலந்தாய்வு முதல் சுற்று நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக கலந்தாய்வு முதல் சுற்று நடந்து முடிந்திருக்கிறது. 2017-ம் ஆண்டில் இருந்து 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. மாணவர்களுக்கு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற இலக்கைவிட, 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற லட்சியமே இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவர், "நான் 11-வது வகுப்புக்கான பாடங்களை படிக்க எனது நேரத்தை செலவழிக்கவில்லை. அந்த நேரத்திலும் 'நீட்' தேர்வுக்காகவே என்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தேன்" என்று கூறியிருக்கிறார்.

'நீட்' தேர்வு அமலுக்கு வந்த புதிதில், அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களும், தமிழ் வழியில் படித்த மாணவர்களும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்வது என்பது அரிதாகவே இருந்தது. 4 மாணவர்கள், 5 மாணவர்களுக்கே இடம்கிடைத்து வந்தது. இந்த நேரத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு, ஒரு பிரகாசமான ஒளிபோல அமைந்தது. மேலும், 'நீட்' தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அந்த வகுப்புகளால் அதிக பலன் இல்லை.

இந்த நிலையில், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தனியார் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல தொடங்கப்பட்டன. இந்த மையங்களில் படிக்க நிறைய செலவு ஆனாலும், அங்கு படித்தால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பது நிச்சயம் என்ற உணர்வு மாணவர்களிடம் இருப்பதால், பிளஸ்-2 படிக்கும்போது மட்டுமல்லாமல், படித்து முடித்து ஒரு ஆண்டு வேறு எந்த படிப்பிலும் சேராமல், 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கல்லூரிக்கு தினமும் செல்வதுபோல போய் படிக்கிறார்கள். இந்த ஆண்டுகூட அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 486 மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், 136 மாணவர்களுக்கு பி.டி.எஸ்., அதாவது பல் மருத்துவ படிப்புக்கும் இடம் கிடைத்துள்ளது. இதில், முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் முதல் தடவை அல்ல, இரண்டாவது தடவை 'நீட்' தேர்வு எழுதியவர்கள். பெரும்பாலான மற்ற மாணவர்களும் தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்கள் கதையெல்லாம் சோக கதையாக இருக்கிறது. அதிக வட்டிக்கு கடன் வாங்கி, தாயின் நகைகளை விற்று பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்திருக்கிறார்கள். மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், அவர்கள் படிப்பு செலவு உள்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்பதால், கடன் வாங்க அவர்கள் குடும்பத்தினர் தயங்குவதில்லை. இதற்கும் வழியில்லாத ஏழை மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு கனவாகவே இருக்கிறது. இந்த நிலையை தவிர்க்க, 'நீட்' தேர்வை ரத்துசெய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுவரையில், அரசு நடத்தும் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் தனியார் மையத்துக்கு இணையான தரத்துடன் இருக்கவேண்டும். கல்வி ஆண்டு தொடக்கம் முதலே இந்த வகுப்புகள் நடத்தப்படவேண்டும். பாடத்திட்டத்திலும் ஒரு பகுதியாக 'நீட்' தேர்வுக்கான பயிற்சி இருக்கவேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Related Tags :
Next Story