வரலாறு படைத்த ஜல்லிக்கட்டு தீர்ப்பு !


வரலாறு படைத்த ஜல்லிக்கட்டு தீர்ப்பு !
x

ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாரம்பரியம், கலாசாரம் உண்டு. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரித்தான ஒரு தனித்துவம் வாய்ந்த பண்டிகையாகும்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாரம்பரியம், கலாசாரம் உண்டு. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரித்தான ஒரு தனித்துவம் வாய்ந்த பண்டிகையாகும். இந்த நன்னாளையொட்டி, சங்க காலங்களில் ஏறுதழுவுதல் என்றும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு என்றும், அந்தந்த ஊர்களில் உள்ள இளைஞர்கள், தங்கள் உடல் வலிமையையும், வீரத்தையும் காட்ட சீறிவரும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு நடக்கும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்துவந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை யாரும் துன்புறுத்துவது கிடையாது. காளைகளுக்கு இணையாக புயல் வேகத்தில் ஓடும் காளையர்களில் ஒருவர் அதன் திமிலை பிடித்து குறிப்பிட்ட தூரத்துக்குள் அடக்குவதுதான் ஜல்லிக்கட்டு விளையாட்டு. இந்த வீர விளையாட்டை பார்க்கும் பார்வையாளர்களும் உற்சாகத்தின் உச்சியில் இருப்பார்கள்.

இந்த நிலையில், 2006-ம் ஆண்டு இந்த விளையாட்டில் கலந்துகொண்ட ஒரு மாணவன் உயிரிழக்க நேரிட்டதையொட்டி, அவரின் தந்தை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடர்ந்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நீண்ட பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இந்த வழக்குகளில் பீட்டா என்ற பிராணிகளை அறவழியில் நடத்தும் மக்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புதான் ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்யவேண்டும் என்ற முஸ்தீபில் இறங்கியது.

இதற்கிடையில், 2011-ம் ஆண்டு மத்திய அரசாங்கம், காளை மாட்டை காட்சிக்காக, இதுபோல விளையாட்டுக்கு பயன்படுத்துவதை தடைசெய்யும் வகையில், வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில், காளை மாட்டையும் சேர்த்து ஒரு மறைமுக தடையை ஏற்படுத்தியது. இதன்பிறகு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட நிரந்தர தடைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த போராட்டங்களின் உச்சக்கட்டமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் முதலில் மாணவர் போராட்டமாகவும், தொடர்ந்து இளைஞர் போராட்டமாகவும் மட்டுமல்லாமல், மக்கள் போராட்டமாக வலுத்தது. சென்னை மெரினா கடற்கரையில் 17-1-2017 முதல் 23-1-2017 வரை கடல் பெரிதா, மக்கள் அலை பெரிதா என்ற வகையில், இரவும், பகலுமாக மக்கள் வெள்ளம் தொடர்ந்து போராடியது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தியபோது அவர், மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என வாக்குறுதி அளித்தார்.

இதையொட்டி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து, தொடர்ந்து இதற்கு மாற்றாக சட்டமும் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்த நிலையில், இதையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லும் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல, பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் கம்பளா போட்டிக்கும் பொருந்தும். தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காப்பாற்றும் இந்த தீர்ப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றாலும், இளைஞர் பட்டாளமும், அவர்களுக்கு துணையாக நின்ற பொதுமக்களும்தான் முக்கிய காரணம். அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டு தெரிவிக்கிறது.


Next Story