2 லட்சம் மையங்களில் நடக்கும் இல்லம் தேடிக் கல்வி திட்டம்!


2 லட்சம் மையங்களில் நடக்கும் இல்லம் தேடிக் கல்வி திட்டம்!
x

“நீ தேடி வந்து உதவி கேட்க வேண்டாம்; உன்னைநாடி வந்து நாங்கள் செய்கிறோம்” என்பதை கடமையாகக் கொண்ட தமிழக அரசு, மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு “இல்லம் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறது.

"நீ தேடி வந்து உதவி கேட்க வேண்டாம்; உன்னைநாடி வந்து நாங்கள் செய்கிறோம்" என்பதை கடமையாகக் கொண்ட தமிழக அரசு, மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு "இல்லம் தேடி மருத்துவம்" என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இதுபோல, கொரோனா காலத்தில், 2 ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடந்த நிலையில், மாணவர்களுக்கு கற்றலில் பெரிய தொய்வு ஏற்பட்டது. அதிலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியைப் பொறுத்தமட்டில், ஆசிரியர்களிடம் நேரடியாக கல்வி கற்பதைப்போல, மாணவர்களால் "ஆன்லைன்" கல்வியில் முழுமையாக கற்க முடியாது. அதற்கான வசதிகளும் பெரும்பான்மையான ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இல்லாத சூழ்நிலையே இருந்தது. இதனால் பெரிய அளவில் கற்றல் இழப்பு ஏற்பட்டது.

இந்த இடைவெளியை சரிசெய்ய, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இல்லம் தேடிக் கல்வி திட்டம். கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் உதித்த அற்புதமான திட்டம்தான் இந்த சீரிய திட்டம். ஆட்சிக்கு வந்த உடனேயே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 1 முதல் 8-ம் வகுப்பு வரை, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காக, தன்னார்வலர்களைக் கொண்டு, தினசரி 1 முதல் 1½ மணி நேரம் (மாலை 5 மணி முதல் 7 மணி வரைக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடிக்கல்வி திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த உன்னத திட்டத்தை 27-10-2021 அன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா முதலியார்குப்பம் கிராமத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மாநில அரசின் 100 சதவீத நிதிபங்களிப்பின் கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்களுக்கு எதிரே மற்றும் மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களின் துணையோடு, 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு குழுவாகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு குழுவாகவும் தன்னார்வலர்கள் மூலமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்காக தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. அந்த பகுதியைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தன்னார்வலர்கள் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கும், பட்டப்படிப்பு தகுதி கொண்ட தன்னார்வலர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதி படைத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதி உள்ள தன்னார்வலர்களுக்கு அரசு பள்ளிக்கூட ஆசிரியர் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள் 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகிறார்கள். டியூஷன் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு, இந்த திட்டம் பெரிதும் கை கொடுக்கிறது. அவர்களின் கற்றல் திறனில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 2 லட்சமாவது இல்லம் தேடிக்கல்வி திட்ட மையத்தை திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் இடங்களில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடப்பது மிகவும் பாராட்டுக்குரியது. மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம், 8-வது வகுப்பு வரை, குறிப்பாக தொடக்க கல்வி மாணவர்களின் அடிப்படை கல்வியில் இருந்த பெரிய இடைவெளியை சமன் செய்ய பெரிதும் உதவியாக இருக்கிறது என்பதே பொதுவான எண்ணமாக இருக்கிறது.


Next Story