வரலாற்று சாதனை படைத்த வேலைவாய்ப்பு!


வரலாற்று சாதனை படைத்த வேலைவாய்ப்பு!
x

கல்வி வளர்ச்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவம் போல, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளிலும் மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கல்வி வளர்ச்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவம் போல, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளிலும் மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசால் மட்டுமே அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிடமுடியாது. தனியார் பங்களிப்பும் அதிகமாக இருக்கவேண்டும். அந்த வகையில், வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்கும் நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும்.

தமிழ்நாட்டில் தொழில்புரட்சி ஏற்பட்டுள்ளதோ என்று நினைக்கும் அளவில், ஏராளமான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆனால் நிறைய தொழிற்சாலைகள், "எங்களிடம் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வேலைகளை பார்க்கும் அளவுக்கு நமது இளைஞர்களிடம் திறன் இல்லையே?" என்று அவர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. இந்த குறையை போக்குவதற்காக பல புதிய திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. நமது படிப்புகளும் வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்றாற்போல, பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தமிழக அரசு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான பல பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன. 'நான் முதல்வன்' திட்டம் வேலைவாய்ப்பில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்து, படிப்பதற்கான ஆர்வம் மிகவும் வளர்ந்துள்ளது. 10-வது வகுப்பு, பிளஸ்-2 படித்து கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்கள், உடனடியாக வேலைவாய்ப்பு வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஐ.டி.ஐ. படிப்பதற்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருகிறார்கள். அங்கு படித்து முடித்தவுடன் தொழிற்சாலைகளில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

படிக்கும்போதே 'கேம்பஸ் இண்டர்வியூ' என்று சொல்லப்படும் வளாக நேர்காணலிலேயே வேலை கிடைப்பதால், இந்த படிப்புகளுக்கு கடும் கிராக்கி இருக்கிறது. 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், வரலாற்றில் முதல் முறையாக 93.30 சதவீதம் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் நடந்துள்ளது. இதில் 40 தொழிற்பயிற்சி நிலையங்களில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கடந்த 25-9-2023 முதல் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. பிட்டர், எலெக்ட்ரீசியன், மெஷினிஸ்டு, டர்னர், சர்வேயர், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், வெல்டர் போன்ற 57 தொழிற்பிரிவுகளிலும், உணவு உற்பத்தி, ஆடை வடிவமைத்தல் தொழில் நுட்பம் போன்ற பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை உள்பட பல வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.2,877 கோடி செலவில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் நவீன தொழிற்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாணவர்களை முன்னணி தொழில் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்காக அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பணியமர்வு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 80 சதவீத மாணவர்கள் வளாக நேர்காணல் மூலம் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதேபோல முனைப்புகளை மற்ற படிப்புகளிலும் உருவாக்கி ஐ.டி.ஐ. படித்த மாணவர்கள் மட்டுமல்லாமல், கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பொறியியல் போன்ற அனைத்து கல்லூரிகளிலும், இதுபோல கேம்பஸ் இண்டர்வியூக்கள் மூலம் உடனடி வேலைவாய்ப்புகளை பெற அரசு ஒரு புதுவேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story