பயனளிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021-ம் ஆண்டு பதவியேற்ற நேரத்தில் கொரோனாவின் கோர தாக்கம் அதிகமாக இருந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021-ம் ஆண்டு பதவியேற்ற நேரத்தில் கொரோனாவின் கோர தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் அவர் கொரோனாவால் ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து அனைவரையும் கைதூக்கிவிடும் பல திட்டங்களை நிறைவேற்றினார். கொரோனாவால் பள்ளிக்கூடங்களெல்லாம் மூடப்பட்டிருந்த நேரத்தில் மாணவர்களுக்கு கற்றல் இழப்பு ஏற்பட்டு இருந்தது. அப்போது தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டு இருந்தன. தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் பள்ளிக்கூடங்களெல்லாம் திறக்கப்பட்ட நேரத்தில், மாணவர்களின் கற்றல் இழப்பை சரிசெய்ய ஒரு அற்புதமான திட்டமாக, 'இல்லம் தேடி கல்வி என்ற திட்டம்' அறிவிக்கப்பட்டது.
முதல் பட்ஜெட்டில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் 1 முதல் 1½ மணி நேரம் (மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல்திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வி என்னும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 92 ஆயிரத்து 297 குடியிருப்புகளில் உள்ள 34 லட்சத்து 5 ஆயிரத்து 856 மாணவர்களுக்கு அவர்கள் இல்லங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பிக்கும் இந்த மகத்தான திட்டத்தை 27.10.2021 அன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா முதலியார் குப்பம் என்ற கிராமத்துக்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மொத்தம் 2 லட்சம் மையங்களில் இந்த திட்டம் தன்னார்வலர்களைக்கொண்டு நிறைவேற்றப்படுகிறது. அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 6 மாதங்களுக்கு மட்டும் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட இந்த திட்டம், மாணவர்கள் அடைந்த கற்றல் திறனை கருத்தில்கொண்டு இதுவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதில் அதிக அக்கறை கொண்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் எந்த அளவு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியுள்ளது என்று மாநில திட்டக்குழு ஒரு ஆழமான ஆய்வை மேற்கொண்டு, அதன் அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மாணவர்களுக்கு கணக்கில் திறன் உயர்ந்திருக்கிறது, மாணவர்களின் தமிழ், ஆங்கில மொழித்திறன் உயர்ந்துள்ளது, ஆக்கப்பூர்வமான சிந்தனைத்திறன் மேம்பட்டு இருக்கிறது, அவர்களுக்கு கல்வி கற்றல் என்பது எளிதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது, பள்ளிக்கூடங்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து இருப்பதால், மாணவர்களின் வருகையும் அதிகரித்து இருக்கிறது என்ற ஆசிரியர்களின் கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் மாணவர்களின் கற்றல் இழப்பை பெரிதும் சரிசெய்துவிட்டது என்பது இந்த ஆய்விலிருந்து தெரிகிறது. இல்லம் தேடி கல்வி திட்டம் இனிய விளைவுகளை ஏற்படுத்திய திட்டம் என்று கூறும் கல்வியாளர்கள் டியூஷன் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த திட்டத்தை ஒரு தொடர் திட்டமாக நிறைவேற்ற அரசு பரிசீலிக்கவேண்டும், ஒருபக்கம் மாணவர்களுக்கு கற்றல் திறன் மேம்படும், மற்றொரு பக்கம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு, தன்னார்வலர்களுக்கு ஒரு சிறிய தொகை கொடுத்தது போல இருக்கும் என்பதும் அவர்களின் கருத்து.