விருந்தினர் போற்றுதும்; விருந்தினர் போற்றுதும்..!


விருந்தினர் போற்றுதும்; விருந்தினர் போற்றுதும்..!
x

தமிழ்நாடு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே உத்தரபிரதேசத்துக்கு அடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது

உலகம் முழுவதும் சுற்றுலா மேம்பாட்டுக்காக அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மக்களுக்கும் இப்போது தங்கள் மாநிலத்தில் உள்ள இடங்களுக்கும், வெளி மாநிலங்களில் உள்ள இடங்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கு வெளிநாடுகளுக்கும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. சுற்றுலாவில் பொழுதுபோக்கு சுற்றுலா, ஓய்வு சுற்றுலா, கோடை கால சுற்றுலா, ஆய்வு சுற்றுலா, கல்வி சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, சாகச சுற்றுலா, விளையாட்டு சுற்றுலா, வர்த்தக சுற்றுலா, இருண்மை சுற்றுலா என்று பல்வேறு வகையான சுற்றுலா பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றனர். இப்போது புதிதாக வேளாண் சுற்றுலாவும் வளரத்தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாடு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே உத்தரபிரதேசத்துக்கு அடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முதல் 5 இடங்களில் இல்லை என்பது ஒரு பெரிய குறையாகும். இந்த துறையில் தமிழ்நாடு காட்ட வேண்டிய அக்கறை இன்னும் அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டைப்பற்றி தெரிவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. தமிழ்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அனைத்து சூழல்களையும் கொண்ட சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.

இவ்வளவு இருந்தும் தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியாததற்கு காரணம் போதிய அளவு மத்திய அரசாங்கத்தின் சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் மிக குறைவாக இருக்கிறது என்பதுதான். கேரளாவில் இத்தகைய அங்கீகாரம் பெற்ற 617 ஓட்டல்கள் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 115 ஓட்டல்கள்தான் இருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து நேரடி விமான போக்குவரத்து மிக குறைவாக இருக்கிறது. ஜப்பானில் இருந்து நிறைய சுற்றுலா பயணிகள் இந்தியா வருகிறார்கள். ஜப்பானில் இருந்து நேரடி விமானம் இருந்தால் 7 மணி நேரத்தில் சென்னை வந்துவிடலாம். ஆனால், இப்போது சிங்கப்பூர் வழியாக சென்னை வர 20 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

இதுபோல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நேரடி விமான போக்குவரத்து இருந்தால், அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர முடியும். என்றாலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளைப் பொருத்தமட்டில், கடந்த 2023-ம் ஆண்டு 28.61 கோடி சுற்றுலா பயணிகள் வந்து இருக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டில் இருந்து 11 லட்சத்து 75 ஆயிரம் பேர்தான் தமிழகம் வந்து இருக்கிறார்கள். இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, இது அதிகம்தான் என்றாலும் இது போதாது. சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக வந்தால் வருமானம் பெருகும், பொருளாதாரம் உயரும். அதற்கு அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு போகும்போது, இனிமையான நினைவுகளுடன் திரும்ப வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் தங்கள் ஊருக்கு சென்று வாய்மொழி விளம்பரதாரர்களாக மாறி, தமிழ்நாட்டைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லி, அவர்களையும் வர ஊக்குவிப்பார்கள்.

இங்கு எல்லோருமே அவர்களை விருந்தினர்களைப்போல உபசரித்து, போற்றி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய விமான நிலையங்கள்தான் சர்வதேச விமான நிலையங்களாக இருக்கின்றன. தூத்துக்குடியையும் சர்வதேச விமான நிலையமாக மாற்றினால், தென் மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். மொத்தத்தில் சுற்றுலா வளர்ந்தால் தமிழகத்தின் பெருமை திக்கெட்டும் பரவும்.


Next Story