உலக பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி பதக்கத்தை உறுதி செய்து சாதனை
உலக பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து வரலாற்று சாதனை படைத்தது.
டோக்கியோ,
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் தகுரோ ஹோகி-யுகோ கோபாயாஷி இணையை எதிர்கொண்டது.
1 மணி 15 நிமிடம் பரபரப்பாக நீடித்த இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் தகுரோ ஹோகி-யுகோ கோபாயாஷி இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. இதன் மூலம் அவர்கள் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.
குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கி விட்ட சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இன்று நடைபெறும் அரைஇறுதி சுற்றில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் இணையை சந்திக்கிறது.
இது குறித்து சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி கூறுகையில், 'இந்த சீசன் எங்களுக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இந்திய ஓபன், தாமஸ் கோப்பை அடுத்து காமன்வெல்த் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றோம். தற்போதைய வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பரவசத்தையும் அளிக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். நடப்பு உலக சாம்பியன் ஜோடிக்கு எதிராக நாங்கள் விளையாடிய விதம் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இந்த போட்டியில் தங்கப்பதக்கத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறோம்' என்றார்.
மற்றொரு கால்இறுதியில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை 8-21, 14-21 என்ற நேர்செட்டில் 3 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்தோனேஷியாவின் முகமது அசன்-ஹேந்திர சேதிவான் ஜோடியிடம் 29 நிமிடங்களில் 'சரண்' அடைந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சீனாவின் ஜாவோ ஜன் பெங்குடன் மோதினார். இதில் முதல் செட்டை கைப்பற்றிய பிரனாய் 2-வது செட்டை விரைவாக இழந்தார். கடைசி செட்டில் ஒரு புள்ளி முன்னிலை வகித்த பிரனாய் தனது ஆட்டத்தில் இழைத்த பல தவறுகள் காரணமாக பின்தங்கியதுடன் அந்த செட்டையும் பறிகொடுத்தார். 64 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பிரனாய் 21-19, 6-21, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.