பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பட்டம் வென்ற பிரான்ஸ் வீராங்கனைக்கு ரூ.12¾ கோடி பரிசு
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
டெக்சாஸ்,
டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா- கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் மல்லுக்கட்டினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட் டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரில் சபலென்கா இழைத்த தவறை சரியாக பயன்படுத்தக் கொண்ட கார்சியா அந்த செட்டை தனதாக்கினார். அடுத்த செட்டிலும் அந்த உத்வேகத்தை தொடர்ந்த கார்சியா, எதிராளியை அடக்கி வெற்றியை தன்வசப் படுத்தினார்.
1 மணி 41 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கரோலின் கார்சியா 7-6 (7-4), 6-4 என்ற நேர்செட்டில் சபலென்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 2-வது பிரான்ஸ் வீராங்கனை என்ற பெருமையை 29 வயதான கரோலின் கார்சியா பெற்றார். ஏற்கனவே 2005-ம் ஆண்டு அமெலி மவுரெஸ்மோ (பிரான்ஸ்) இந்த பட்டத்தை வென்று இருந்தார்.
மகுடம் சூடிய கார்சியா ரூ.12¾ கோடியை பரிசாக அள்ளினார். அத்துடன் 1,375 தரவரிசை புள்ளியும் கிட்டியது. இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் 2 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். தோல்வி கண்ட சபெலன்காவுக்கு ரூ.6 கோடி பரிசாக கிடைத்தது. மேலும் தரவரிசையில் 2 இடம் உயர்ந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார்.
வெற்றிக்கு பிறகு கார்சியா கூறுகையில், 'இறுதிப்போட்டியில் ஒவ்வொரு புள்ளிக்காகவும் கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆண்டு முழுவதும் நாங்கள் கடினமாக உழைத்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இந்த போட்டி மிகவும் சிறப்பானதாக இருந்தது. மிகப்பெரிய பட்டத்தை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார்.
தோல்வி குறித்து சபலென்கா கருத்து தெரிவிக்கையில், 'நான் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் அவரது ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது.' என்றார்.