விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் எளிதில் வெற்றி
விம்பிள்டன் டென்னிசில் முதல் சுற்று ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெற்றார்.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்றும் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-0, 6-3 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீராங்கனை ஜானா பெட்டை (குரோஷியா) பந்தாடினார்.
ஸ்வியாடெக் தொடர்ச்சியாக ருசித்த 36-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் 2000-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக அதிக வெற்றி பெற்ற வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். ஸ்வியாடெக் 2-வது சுற்றில் பட்டினாமா கெர்கோவை (நெதர்லாந்து) எதிர்கொள்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி (கிரீஸ்) 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஜோ ஹைவ்சை (ஆஸ்திரேலியா) தோற்கடித்தார். இதே போல் பாலா படோசா (ஸ்பெயின்) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் லோசா சிரிகோவை (அமெரிக்கா) விரட்டியடித்தார்.
சிமோனா ஹாலெப் (ருமேனியா), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் தடையை கடந்தனர். அதே சமயம் சீனாவின் கியாங் வாங் 6-4, 5-7, 6-2 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.