விம்பிள்டன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி


விம்பிள்டன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி
x

விம்பிள்டன் டென்னிசில் 4-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே), தரவரிசையில் 142-வது இடம் வகிக்கும் லியாம் பிராட்டியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். 5 செட் வரை நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் லியாம் பிராட்டி 6-4, 3-6, 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 27 நிமிடங்கள் நீடித்தது.

7-ம் நிலை வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) தன்னை எதிர்த்த சக நாட்டவர் அஸ்லான் கரட்சேவை 6-7 (4-7), 6-3, 6-4, 7-5 வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ஷபோவலோவ் (கனடா), பெரேட்டினி (இத்தாலி), ஹர்காக்ஸ் (போலந்து) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றியை சுவைத்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஜூலி நீமைர் (ஜெர்மன்) 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டி வரை எட்டியவரான கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) விரட்டினார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-3, 6-0 என்ற நேர் செட்டில் போடோரோஸ்கோவை (அர்ஜென்டினா) ஊதித்தள்ளினார்.

மழையால் தள்ளிப்போன முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் அன்னா போன்டாரை (ஹங்கேரி) வீழ்த்தினார்.

சோபியா கெனின் (அமெரிக்கா), சுரென்கோ (உக்ரைன்), பெட்ரா மார்டிச் (குரோஷியா), ஹேடட் மையா (பிரேசில்), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) உள்ளிட்டோரும் 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.


Next Story