அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடக்கம் - கடைசி தொடரில் களம் இறங்குகிறார் செரீனா


அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடக்கம் - கடைசி தொடரில் களம் இறங்குகிறார் செரீனா
x

அமெரிக்க வீராங்கனை 40 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்து விட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த 3 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் இந்த போட்டியில் பங்கேற்க இயலாமல் போய் விட்டது. இதனால் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான டேனில் மெட்விடேவ் (ரஷியா), 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரில் ஒருவர் இந்த முறை பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

மெட்விடேவ் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவை சந்திக்கிறார். நடால் தனது சவாலை ஆஸ்திரேலியாவின் 'வைல்டு கார்டு' வீரர் ரிங்கி ஹிஜிகட்டாவுடன் தொடங்குகிறார். கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதி சுற்றில் நடால்- மெட்விடேவ் மோதும் வாய்ப்புள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் சிமோனா ஹாலெப் (ருமேனியா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), அண்மையில் சின்சினாட்டி ஓபனை வசப்படுத்திய கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஜெசிகா பெகுலா, கோகோ காப் (அமெரிக்கா), மரியா சக்காரி (கிரீஸ்), ஜாபியர் (துனிசியா), நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து), அனெட் கோன்டாவெய்ட் ( எஸ்தோனியா), நவோமி ஒசாகா (ஜப்பான்), சபலென்கா (பெலாரஸ்) உள்ளிட்டேர் இடையே கோப்பையை வெல்ல குடுமிபிடி நிலவுகிறது. ஸ்வியாடெக் முதல் சுற்றில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) எதிர்கொள்கிறார்.

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான அமெரிக்க வீராங்கனை 40 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் தனது கடைசி தொடரில் விளையாட இருப்பதால் அவருக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். 2017-ம் ஆண்டுக்கு பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லாத அவரது ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. தரவரிசையில் பின்தங்கிய வீராங்கனைகளிடம் கூட எளிதில் தோற்று விடுகிறார். எனவே அவர் ஒரு சில சுற்றுகளை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும். செரீனா இன்று தனது முதலாவது சுற்றில் தரவரிசையில் 80-வது இடத்தில் உள்ள டாங்கா கோவினிச்சுடன் (மான்ட்னெக்ரோ) மோதுகிறார்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.480 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் கோப்பையை ஏந்தும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.20 கோடி கிடைக்கும். 2-வது இடம் பிடிப்போர் ரூ.10 கோடியை பரிசாக பெறுவார்கள். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story