பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு ஜோகோவிச், நடால் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அல்ஜாஸ் பெடேனை (சுலோவெனியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் அடுத்து அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொள்கிறார். முன்னதாக ஸ்வாட்ஸ்மேன் 3-வது சுற்றில் 6-3, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவை (பல்கேரியா) விரட்டியடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஜான்ட்ஸ்கல்ப்பை (நெதர்லாந்து) தோற்கடித்து 17-வது முறையாக 4-வது சுற்றை எட்டினார். நடால் அடுத்து ஆஜர் அலியாசிம்மை (கனடா) சந்திக்கிறார். அலியாசிம்முக்கு நடாலின் மாமா டோனி பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 47-வது இடம் வகிக்கும் பெலாரசின் சஸ்னோவிச் 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்தார். ஒலிம்பிக் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 5-7, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் லேலா பெர்னாண்டசிடம் (கனடா) வீழ்ந்தார். இந்த வெற்றிக்காக 2 மணி 49 நிமிடங்கள் போராடிய லேலா பெர்னாண்டஸ் பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக 4-வது சுற்றில் கால்பதித்துள்ளார். கோகோ காப் (அமெரிக்கா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), அனிசிமோவா (அமெரிக்கா) உள்ளிட்டோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.