மெல்போர்ன் மைதானம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் - சானியா மிர்சா
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எனது கடைசி ஆட்டத்தை முடித்துக்கொள்ள இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என சானியா கூறினார்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை, பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது. கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்ற கனவில் போபண்ணாவுடன் இணைந்து களமிறங்கினார் சானியா.
1 மணி 27 நிமிடங்கள் மல்லுகட்டிய சானியா -ரோகன் போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர்செட்டில் ஸ்டெபானி-மேடோஸ் கூட்டணியிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற ஸ்டெபானி-மெடோஸ் ஜோடிக்கு ரூ.91 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த சானியா-போபண்ணா ஜோடிக்கு ரூ.51 லட்சம் பரிசாக கிடைத்தது.
இதன் பின்னர் சானியா தொடர்ந்து பேசுகையில், நான் அழுகிறேன் என்றால் இது ஆனந்த கண்ணீர். எனது தொழில்முறை டென்னிஸ் பயணத்தை மெல்போர்ன் மைதானத்தில் 2005-ம் ஆண்டில் தொடங்கினேன். அப்போது நான் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்சை (அமெரிக்கா) சந்தித்தேன்.
அதன் பிறகு இங்கு பல போட்டிகளில் பங்கேற்றதுடன் பட்டங்களும் வென்று இருக்கிறேன். மெல்போர்ன் மைதானம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எனது கடைசி ஆட்டத்தை முடித்துக்கொள்ள இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது.
கலப்பு இரட்டையரில் ரோகன் போபண்ணா எனது முதலாவது கூட்டாளி ஆவார். எனக்கு 14 வயது இருக்கையில் நாங்கள் இணைந்து தேசிய போட்டியில் பட்டத்தை வென்றோம். அவர் எனது சிறந்த நண்பர் மட்டுமின்றி சிறந்த இணை ஆட்டக்காரரும் ஆவார். கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் எனது குழந்தைக்கு முன்னால் விளையாட முடியும் என்று ஒருபோதும் நினைத்து பார்த்தில்லை.
எனது 4 வயது மகன் மற்றும் எனது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர், ரோகனின் மனைவி, எனது பயிற்சியாளர்கள் இங்கு வந்து இருக்கின்றனர். இதனால் உள்நாட்டில் விளையாடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இது உண்மையிலேயே எனக்கு சிறப்பு வாய்ந்த தருணமாகும். நீங்கள் எல்லாம் இல்லாமல் என்னால் எதுவும் சாதித்து இருக்க முடியாது என்று தெரிவித்தார்.