மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் மீண்டும் 'சாம்பியன்'


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் மீண்டும் சாம்பியன்
x

Image Courtesy : AFP 

ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்திருப்பதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்கிறார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வந்தது. பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரையில் நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதிசுற்றில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 65-ம் நிலை வீரர் ஜன் லினர்ட் ஸ்ரப்பும் (ஜெர்மனி) மோதினர்.

ஸ்ரப் தொடக்கம் முதலே கடும் சவால் அளித்த போதிலும் 3 செட் வரை போராடி அல்காரஸ் வெற்றியை வசப்படுத்தினார். 2 மணி 25 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் அல்காரஸ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வாகை சூடி சாம்பியன் கோப்பையை தக்கவைத்தார். 20 வயதான அல்காரசுக்கு இது 10-வது சர்வதேச பட்டமாகும்.

இதன் மூலம் 'ஓபன் எரா ' டென்னிஸ் வரலாற்றில் (1968-ம் ஆண்டில் இருந்து) மிக குறைந்த வயதில் 10 பட்டங்களை வென்றவர்களின் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்தார். அவருக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. 2-வது இடத்தை பெற்ற ஸ்ரப் ரூ.5.கோடியே 23 லட்சத்தை பரிசாக பெற்றார்.

அடுத்து ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்திருப்பதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறார்.


Next Story