"கடைசி விம்பிள்டன் போட்டியா?" - அமெரிக்க வீராங்கணை செரினா வில்லியம்ஸ் பதில்
விம்பிள்டன் டென்னிசில், முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
லண்டன்,
கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 7 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 115- ம்நிலை வீராங்கனை ஹார்மோனி டானை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.
ஓராண்டுக்கு பிறகு களம் திரும்பியதால் செரீனாவின் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் 3 மணி 11 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் செரீனா 5-7, 6-1, 6-7 (7-10) என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். 24 வயதான ஹார்மோனி விம்பிள்டனில் அடியெடுத்து வைத்த தனது அறிமுக ஆட்டத்திலேயே பெரிய வீராங்கனையை வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.
40 வயதான செரீனாவிடம், இதுவே உங்களது கடைசி விம்பிள்டன் போட்டியாக இருக்குமா என்ற கேட்ட போது, "இந்த கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது" என்றார். அடுத்து சொந்த மண்ணில் நடக்க உள்ள அமெரிக்க ஓபன் டென்னிசில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும், அதில் தன்னால் பங்கேற்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.