கொரியா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அங்கிதா வெற்றி
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா வெற்றிபெற்றுள்ளார்.
டோக்கியோ,
பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நவோமி ஒசாகா (ஜப்பான்), தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ள டாரியா சாவில்லியை (ஆஸ்திரேலியா) எதிர்கொண்டார்.
முதல் செட்டில் நவோமி ஒசாகா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது டாரியா சாவில்லி காயம் காரணமாக விலகினார். இதனால் நவோமி ஒசாகா 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-1 என்ற நேர்செட்டில் பல்கேரியாவின் இசபெல்லா ஷினிகோவாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல் கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது. இதன் முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்லிஸ்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் புசார்ட் 6-7 (5-7), 6-7 (5-7) என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவிடம் வீழ்ந்து வெளியேறினார்.