விம்பிள்டனில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன்: ரபேல் நடால்
ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக, விம்பிள்டன் டென்னிசில் பங்கேற்கும் நம்பிக்கையில் உள்ளார்.
மேட்ரிட்,
ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (வயது 36). சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றார். அது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
இதனை தொடர்ந்து, நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிசில் பங்கேற்க அவர் ஆர்வமுடன் உள்ளார். கடந்த ஆண்டு இடது காலில் ஏற்பட்ட வலியால் நடால் விம்பிள்டன் போட்டியில் விளையாடவில்லை.
அதற்கு முன் 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையில் அவர் உள்ளார்.
இதுபற்றி மல்லோர்காவில் நடால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, விம்பிள்டனில் விளையாட வேண்டும் என்பது எனது நோக்கம் ஆகவுள்ளது என கூறியுள்ளார்.
முதன்முறையாக தந்தை ஆக போகிற செய்தியை உறுதிப்படுத்தியுள்ள நடால், கடந்த வாரம் பார்சிலோனாவுக்கு சென்றுள்ளார். அவரது இடது கால் நரம்பு வலியை குறைப்பதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையால் அவரது கால் பாதத்தின் நரம்புகள் உணர்வற்று இருக்கும் என நடாலின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த 5ந்தேதி நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் விளையாடும்போதே அவருக்கு காலில் வலி இருந்தது. அதனுடனேயே காஸ்பர் ரூடுக்கு எதிராக விளையாடி போட்டியில் வெற்றி பெற்றார்.
நடால் தொடர்ந்து கூறும்போது, மருத்துவ சிகிச்சை மற்றும் கடந்த வார பயிற்சி ஆகியவை எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என எடுத்து கூறியுள்ளது. வருகிற திங்கட்கிழமை நான் லண்டனுக்கு செல்கிறேன்.
ஹர்லிங்காமில் நடைபெறும் காட்சி போட்டியில் விளையாடுகிறேன். ஒரு வார காலம் பயிற்சி எடுத்து கொள்கிறேன். அதன்பின், விம்பிள்டனில் பங்கேற்பது சாத்தியமா? என பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
நடால் இதுவரை மொத்தம் இரண்டு முறை விம்பிள்டன் பட்டம் (2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில்) வென்றுள்ளார்.